

மறைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கை தனது இறுதி அஞ்சலி உரையால் தலைமையேயேற்று நடத்தினார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்.
இறுதிச் சடங்கு ஆஸ்திரேலிய தொலைக்காட்சி, வானொலியில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. தவிரவும் சிட்னி கிரிக்கெட் மைதானம், பெர்த், அடிலெய்ட், ஹோபார்ட் மைதானம் ஆகியவற்றில் திரையில் ஒளிபரப்பப் படுகிறது.
ஹியூஸிற்கான புகழாஞ்சலியை அவரது சகோதரர் ஜேசன், சகோதரி மீகன், அவரது உறவினர் நினோ ரமுனோ ஆகியோர் செலுத்தினர்.
கிளார்க் தனது அஞ்சலி உரையை நிகழ்த்தும் முன் கண்ணீரை அடக்க படாத பாடுபட்டார்.
அவர் பேசும்போது, “வியாழக்கிழமை இரவு சிட்னி மைதானத்திற்குச் சென்றிருந்தேன். அதே புல் இதழ்களின் மீது நானும், பிலிப் ஹியூஸ், மற்றும் அவரது சகாக்களும் எத்தனையோ முறை ஜோடி சேர்ந்து ஆடியுள்ளோம். சிறுவர்களாக எங்களது தலையில் நாங்கள் வரைந்து கொண்ட கனவினை இங்கு வாழ்ந்தோம்.
இதே மைதானத்தில் ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்துள்ளனர். இதே எல்லைக்கோட்டிற்கு அவர் எத்தனை முறை பந்துகளை அடித்திருப்பார்? ஆனால் இதே இடம்தான் அவரை இனி எழுந்திருக்க முடியாமல் வீழ்த்தியது. நான் முழங்காலிட்டு புற்களைத் தொட்டேன். அவர் என்னுடன் இருக்கிறார். நான் என்னைக் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன், அவர் தேநீர் இடைவேளைக்கு முன் நாம் சிறிது நேரம் ஆடவேண்டும் என்கிறார். ஒரு தளர்வான ஷாட்டை நான் ஆடியதை எனக்கு அவர் அறிவுறுத்துகிறார். அன்று இரவு என்ன சினிமா நாம் பார்க்கவேண்டும் என்று பேசுகிறோம்.
இந்த மைதானத்தில் அவரது ஆன்மா இருக்கிறது. எனக்கு இந்த மைதானம் எப்போதும் புனிதமானது. அவருக்கு கிரிக்கெட் உலகிலிருந்து வரும் அஞ்சலிகள் என்னை நெகிழச்செய்கின்றன.
இதுதான் கிரிக்கெட் உணர்வு என்பதா? கராச்சியில் ஒரு சிறுமி மெழுகுவர்த்தியுடன் அஞ்சலி செலுத்துகிறார். கிரிக்கெட் ஆட்டத்தின் மாஸ்டர்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, வார்ன், ஆகியோர் தங்களது துயரத்தை உலகிற்குக் கூறுகின்றனர். கிரிக்கெட் உணர்வு நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. ஒரு கவர் டிரைவின் த்ரில் நமக்கு இத்தகைய உணர்வைக் கொடுக்கும்.
நமக்குத் தெரியாத பலர் லார்ட்ஸ் மைதானத்தில் மலரஞ்சலி செலுத்துகின்றனர். இதுதான் நமது விளையாட்டை உலகின் மிகப்பெரிய விளையாட்டாக உருவாக்கியுள்ளது. பிலிப் ஹியூஸின் ஆன்மா எப்போதுமே இனி நமது கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நாம், அவர் நேசிக்கும் இந்த ஆட்டத்தின் பாதுகாவலர்களாக செயல்படுவோம்.
நாம், ஆட்டத்தின் உணர்வைக் கேட்டறிய வேண்டும், நாம் அதனைக் கொண்டாட வேண்டும். நாம் அதிலிருந்து வாழ்க்கைப்பாடத்தைக் கற்க வேண்டும்.
என் சகோதரனே! அமைதியாக ஓய்வெடு! நான் உன்னை மைதானத்தில் சந்திக்கிறேன்”
இவ்வாறு கிளார்க் உருக்கமாக பேசினார்.