Published : 12 Dec 2014 10:04 AM
Last Updated : 12 Dec 2014 10:04 AM

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் காலிறுதியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆரம்பத்தில் 0-2 என பின்தங்கியிருந்த இந்திய அணி, பின்னர் அதிலிருந்து மீண்டு வாகை சூடியது.

ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-வது நிமிடத்திலேயே இந்தியா கோல் வாய்ப்பை கோட்டைவிட, 7-வது நிமிடத்தில் பெல்ஜியத்துக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை கோட்டைவிட்ட பெல்ஜியம் 12-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை ஃபெலிக்ஸ் டெனாயர் அடித்தார். இதனால் முதல் கால் ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்ற பெல்ஜியம், பின்னர் நடைபெற்ற 2-வது கால் ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. இந்த கோலை செபஸ்டின் டாக்கியர் அடித்தார்.

திருப்புமுனை

இதையடுத்து அதே 18-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதில் ரூபிந்தர் பால் சிங் கோலடித்தார். இந்த கோல் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்த, இந்தியா பின்னடைவிலிருந்து மீண்டது. தொடர்ந்து உற்சாகமாக ஆடிய இந்தியா 27-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை உத்தப்பா அடித்தார். இதனால் 2-வது கால் ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இந்தியா வெற்றி

3-வது கால் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் மிகுந்த உத்வேகத்தோடு ஆடினர். 32-வது நிமிடத்தில் கோல் வாய்ப்பை நழுவவிட்ட இந்திய அணி, 41-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் கோலடித்ததால் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 4-வது கால் ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் தரம்வீர் சிங் கோலடிக்க, இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

அரையிறுதியில் ஆஸி.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா தனது காலிறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தது. நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜெர்மனியை சந்திக்கிறது ஆஸ்திரேலியா.ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனி தனது காலிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்தது.

பாகிஸ்தான் அபாரம்

மற்றொரு காலிறுதியில் பாகிஸ்தான் அணி 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற அணியான நெதர்லாந்தை தோற்கடித்தது. கடந்த 16 ஆண்டுகளில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முன்னதாக 1998-ல் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியிருந்தது பாகிஸ்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x