பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை சமன் செய்த நியூசிலாந்து

பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை சமன் செய்த நியூசிலாந்து
Updated on
2 min read

அபுதாபியில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-2 என்று சமன் செய்துள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து கேன் வில்லியம்சனின் அருமையான 123 ரன்களுடன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் யூனிஸ் கானின் தனித்த போராட்ட சதத்தினால் 292 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வி தழுவியது.

டாஸ் வென்ற பிறகு பேட் செய்ய முடிவெடுத்தார் கேப்டன் வில்லியம்சன். மார்டின் கப்தில் மற்றும் பிரவுன்லி தொடக்க விக்கெட்டுக்காக 81 ரன்களைச் சேர்த்தனர். பிரவுன்லி 42 ரன்கள் எடுத்து ஷாகித் அஃப்ரீடியிடம் அவுட் ஆனார். கப்தில் 58 ரன்கள் எடுத்து சொஹைல் தன்வீர் பந்தில் ஆட்டமிழக்க ஸ்கோர் 24-வது ஓவரில் 125/2 என்று இருந்தது. பிறகு வில்லியம்ன்சன் 123 ரன்களை எடுக்க டெய்லர், ஆண்டர்சன், லாதம் உதவியுடன் கடைசி 10 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 299 ரன்கள் எடுத்தது.

300 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் பேட்டிங்கை நியூசிலாந்தின் 2 எக்ஸ்பிரஸ் வீச்சாளர்களான ஹென்றி, மில்ன ஆகியோர் 82/4 என்று சுருக்கினர். ஹென்றி வீசிய அதிவேக அவுட் ஸ்விங்கரில் அகமது ஷேஜாத் (0) ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. நசீர் ஜாம்ஷெட், யூனிஸ் கான் இணைந்து இந்த வேகத்தை கொஞ்சம் எதிர்கொண்டு தாக்குப் பிடித்தனர். ஆனால் கோரி ஆண்டர்சன் பந்தில் நசீர் ஜாம்ஷெட் 30 ரன்களுக்கு எல்.பி. ஆகி வெளியேறினார்.

டேனியல் வெட்டோரி மொகமது ஹபீஸையும், ஹேரிஸ் சோஹைலையும் சொற்பமாக வீழ்த்தினார். யூனிஸ் கான் 2 ரன்களில் இருந்த போது ராஸ் டெய்லர் மில்ன பந்தில் கேட்ச் விட்டார். அதன் பிறகு வெட்டோரி ஒரு முனையில் தொடர வேகப்பந்து மறுமுனையில் தொடர பவுண்டரிகளுக்கு வறட்சி ஏற்பட்டது சுமார் 60 பந்துகள் பவுண்டரி வரவில்லை.

அதன் பிறகே வெட்டோரியை ஒரு ஸ்லாக் ஸ்வீப் செய்து சிக்ஸ் அடித்தார் யூனிஸ் கான். 32-வது ஓவரில் பவர் பிளே எடுக்கப்பட்டு உமர் அக்மல் 29 ரன்கள் எடுக்க பவர் பிளேயில் 45 ரன்கள் எடுக்கப்பட்டது. அதிவேக ஹென்ரி பந்தையும் யூனிஸ் கான் சிக்சருக்கு விரட்டினார்.

அக்மல், யூனிஸ் இணைந்து 88 பந்துகளில் 90 ரன்களைச் சேர்த்தனர். அப்போது யூனிஸ் அடித்த நேர் டிரைவ் பவுலர் கையில் பட்டு ரன்னர் முனை ஸ்டம்பில் பட அக்மல் ரன் அவுட் ஆனார்.

அதன் பிறகு பூம் பூம் அஃப்ரீடி களமிறங்கி 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 25 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். 'எக்ஸ்பிரஸ்' ஹென்றி லைன் மற்றும் லெந்த் காலியானது அவரது பந்தை எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பயங்கரமான சிக்சரை அடித்தார் அஃப்ரீடி.

42 பந்துகளில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில் மற்றொரு அதிவேக பவுலர் மில்ன, அஃப்ரீடியை வீழ்த்தினார். வெட்டோரி பந்தில் 103 ரன்கள் எடுத்த யூனிஸ் கானும் ஆட்டமிழந்தார்.

கடைசியிலும் பாகிஸ்தான் விடவில்லை. சொஹைல் தன்வீரும், அன்வர் அலியும் இணைந்து 31 ரன்களைச் சேர்த்தனர். ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை.ஆட்ட நாயகனாக வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in