Published : 05 Dec 2014 12:12 PM
Last Updated : 05 Dec 2014 12:12 PM

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா இன்று மோதல்

சென்னை நேரு மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னையின் எப்.சி. அணியும், 2-வது இடத்தில் இருக்கும் கோவா எப்.சி. அணியும் மோதுகின்றன.

இரு அணிகளுக்குமே இந்த ஆட்டத்தோடு சேர்த்து இரு ஆட்டங்கள் உள்ளன. சென்னை அணியைப் பொறுத்தவரையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் 25 புள்ளிகளைப் பெறுவதோடு அரையிறுதிக்கும் முன்னேறிவிடும். அதேநேரத்தில் கோவா அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை நெருங்கிவிடும். ஒருவேளை கோவா அணி தோற்றால், கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய சிக்கல் ஏற்படலாம்.

கோவா அணி இதுவரை 4 தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் தனது சொந்த மண்ணில் சென்னையிடம் தோல்வி கண்டிருக்கிறது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க கோவா போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சென்னை அணியோ தனது சொந்த மண்ணில் இதுவரை தோற்கவில்லை. இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றியையும், 2 டிராவையும் பதிவு செய்துள்ளது. அதனால் சென்னை அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.

அதேநேரத்தில் சென்னை அணியின் முன்னணி வீரர்களான மிட்பீல்டர் இலானோ புளூமர், ஸ்டிரைக்கர் மென்டோஸா, பின்கள வீரர் கவுரமங்கி ஆகியோர் காயம் காரணமாக விளையாடாதது பின்னடைவாகும். சென்னையில் இலானோவுக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அப்படியிருக்கையில் அவர் விளையாடாதது அவருடைய ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமாக இருக்கும்.

எனினும் பின்கள வீரர் மென்டி, கேப்டன் போயன், புருனோ பெலிசாரி, இந்தியாவைச் சேர்ந்த ஸ்டிரைக்கர் பல்வந்த் சிங் உள்ளிட்டோர் சென்னை அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இவர்களில் புருனோ, கடைசி 3 ஆட்டங்களிலும் சென்னை அணிக்காக கோலடித்துள்ளார். அதனால் சென்னை அணியின் பயிற்சியாளர் மெட்டாரஸி எவ்வித கவலையுமின்றி நம்பிக்கையோடு இருக்கிறார்.

காயம் காரணமாக முன்னணி வீரர்கள் விளையாடாத நிலையில், நார்த் ஈஸ்ட் அணியிடம் தோற்றபோதும்கூட நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. நாளைய (இன்று) போட்டியின் முடிவில் நாங்கள் வென்றாலும், தோற்றாலும் முதல் இடத்தில்தான் இருப்போம் என மெட்டாரஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவா அணி, டோல்கே, மேன்டர் ராவ் தேசாய், ஆண்ட்ரே சான்டோஸ் போன்ற வலுவான வீரர்களைப் பெற்றிருந்தாலும், சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும்போது கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

அணிக்கு திரும்புகிறார் இலானோ

கால் பகுதியில் ஏற்பட்ட தசைநார் முறிவு காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த பிரேசிலைச் சேர்ந்த இலானோ வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையின் எப்.சி. அணியுடன் இணைகிறார்.

சென்னை அணியின் முன்னணி மிட்பீல்டரான இலானோவின் வருகை சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்றாலும், டெல்லி டைனமோஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் அவர் விளையாடமாட்டார். அதேநேரத்தில் அரையிறுதி போட்டியில் விளையாட அவர் தயாராகிவிடுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



போட்டி நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x