Published : 28 Dec 2014 12:31 PM
Last Updated : 28 Dec 2014 12:31 PM

ரஹானே, கோலி சதம்: எழுச்சியுடன் தொடங்கி பின்னர் சொதப்பிய இந்தியா 462 ரன்கள் குவிப்பு

இந்தியா ஆஸ்திரேலியா இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா, 8 விக்கெட்டுகளை இழந்து 462 ரன்களை எடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவை விட இந்தியா 68 ரன்கள் பின் தங்கியுள்ளது.

தேநீர் இடைவேளை வரை வெகு சிறப்பாக இருந்த இந்திய அணியின் ஆட்டம், ரஹானே வீழ்ந்த பின் மொத்தமாக மாறியது. ரஹானே 147 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தொடர்ந்து வந்த ராகுல் (3), தோனி (11), அஸ்வின் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் கோலி மட்டும் பொறுமையாக ஆடி 242 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார்.

அஸ்வின் விக்கெட்டைத் தொடர்ந்து கோலியுடன் ஜோடி சேர்ந்த ஷமி, பொறுப்பாக ஆடி, கோலிக்கு துணை நின்றார். இன்றைய ஆட்ட த்தின் கடைசி ஓவரில், ஜான்சனின் பந்தில் கோலி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டோடு இன்றைய நாள் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 462 ரன்களை எடுத்திருந்தது. கோலி ஷமி 9 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸி. அணியின் ரயன் ஹாரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவை விட இந்தியா 68 ரன்கள் பின்தங்கியுள்ளது.

முன்னதாக இன்றைய ஆட்டத்தை 108 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் தொடங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே புஜாராவை 25 ரன்களுக்கு இழந்தது. நிலைத்து ஆடி வந்த முரளி விஜய் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் கோலி இணை வெகு சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டனர். ரஹானே விரைந்து ஆடி 127 பந்துகளிலேயே சதத்தை எட்டினார். மறுமுனையில் ஆடி வந்த கோலியும், லயான் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி 166 பந்துகளில் சதத்தைக் கடந்தார். ரஹானே ஆட்டமிழக்கும் முன் வரை, இந்த இணையின் பார்ட்னர்ஷிப்பில் 262 ரன்கள் சேர்ந்தது. இந்தியா - ஆஸ்திரேலிய ஆட்டங்களில், இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x