Last Updated : 31 Dec, 2014 12:58 PM

 

Published : 31 Dec 2014 12:58 PM
Last Updated : 31 Dec 2014 12:58 PM

காலம் தோறும் காலண்டர்

உலகில் இன்றைக்குப் பெரும்பாலோர் பயன்படுத்தும் காலண்டர், கிரிகோரிய காலண்டர். அதற்குக் காரணம் பிரிட்டன், அமெரிக்காவின் காலணி நாடுகள் இந்தக் காலண்டரை ஏற்றுக்கொண்டதுதான்.

# பண்டைக் காலத்தில் ரோமானியப் புத்தகக் காப்பாளர்கள் தங்கள் பதிவுகளை 'காலண்டரியம்' என்ற பதிவேட்டில் பதிந்து வைப்பது வழக்கம். அதுவே காலண்டர் என்ற பெயர் உருவாவததற்குக் காரணமாக இருந்தது.

# கி.மு. 4236-ல் எகிப்திய காலண்டர் உருவாக்கப்பட்டது. அதுவே உலகில் முதன்முதலில் உருவான காலண்டர். அந்தக் காலண்டரிலும் 365 நாட்கள்தான் இருந்தன என்பது மிகப் பெரிய ஆச்சரியம்.

# கி.மு. 2637-ல் சீனப் பேரரசர் ஹூவாங்தி சீனக் காலண்டரை உருவாக்கினார். இது ஒரு புராணக் கதை என்றும் கூறப்படுகிறது. அதில் 354 நாட்களே இருந்தன. கிரேக்க ஆண்டு, யூத ஆண்டுகளிலும் 354 நாட்களே இருந்தன. எஞ்சிய நாட்கள் பின்னர் சேர்த்துக் கொள்ளப் பட்டன.

# பண்டைக் காலத்தில் ரோமானியர்கள் ஒவ்வொரு முழுநிலவின் போதும் புது மாதம் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த ரோமானியக் காலண்டரே, நாம் பயன்படுத்தும் கிரிகோரிய காலண்டர் உருவாவதற்கு அடிப்படை. கிரிகோரிய காலண்டரில் உள்ள மாதங்களின் பெயர்கள் அனைத்தும் ரோமானியப் பெயர்கள்.

# பண்டைய ரோமானியக் காலண்டரில் 304 நாட்கள், 10 மாதங்களே இருந்தன. புது வருஷம் மார்ச் மாதம் ஆரம்பித்து, டிசம்பரில் முடிந்தது. அதற்குப் பிறகு வந்த இரண்டு மாதங்களும் கொண்டாட்டத்துக்கான மாதங்கள்.

# ரோம அரசர் போம்பிலஸ் கி.மு. 690-ல் இந்தக் கொண்டாட்ட மாதங்களை ஆண்டுடன் சேர்த்தார். அப்போது ஆண்டின் மொத்த நாட்கள் 355 நாட்களாக மாற்றப்பட்டன.

# தொடக்கம்-முடிவின் கடவுளான ஜானஸின் பெயரில் ஜனவரி என்ற மாதம் உருவானது. அது தொடக்க மாதமாகவும் மாறியது. ஃபெப்ருவா விழாவே ஃபிப்ரவரி என்ற பெயர் வந்ததற்குக் காரணம்.

#கி.மு. 45-ல் ரோம அரசர் ஜூலியஸ் சீசர்தான் ரோமானியக் காலண்டரை அங்கீகரித்து, ஜனவரியை ஆண்டின் தொடக்கமாக அறிவித்தார். ஜூலியஸ் சீசர் கணக்கின்படி ஆண்டுக்கு 365 கால் நாட்கள். அது ஜூலியன் காலண்டர் என்று அறியப்பட்டது.

# நிலவை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள், சூரியனைப் பூமி சுற்றுவதை அடிப்படையாகக் கொண்ட ஆண்டு ஆகிய இரண்டையும் ஜூலியஸ் சீசர் முறைப்படுத்தினார்.

# ரோமானியர் களுக்கு இரட்டைப்படை எண்கள் பிடிக்காது. அதனால் ரோமானிய மாதங்களில் 29, 31 நாட்களே இருந்தன. ஜூலியஸ் சீசர்தான் இதை மாற்றி முறைப்படுத்தினார். அதேபோல ஆண்டின் தொடக்கமாக இருந்த மார்ச் 25-ஐ, மாற்றி ஜனவரி 1-ஐத் தொடக்கமாக்கினார்.

#குவின்டிலியஸ், செக்ஸ்டிலிஸ் மாதங்களுக்குப் பதிலாக ஜூலியஸ், அவர் தத்தெடுத்த மகன் அகஸ்டஸ் பெயர்களில் இரண்டு மாதங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன.

# 1752-ல் பிரிட்டன், அமெரிக்காவின் காலனி நாடுகள் கிரிகோரிய காலண்டரை ஏற்றுக்கொண்டன. இன்றைக்குப் பழைய ரோமானியக் காலண்டர் இல்லையென்றாலும் ரோமானிய மாதப் பெயர்கள் மட்டும் அப்படியே நிலைத்துவிட்டன.

# ஓர் ஆண்டுக்கு 365 நாள் என்று சொன்னாலும், உண்மையில் 365 நாள், 5 மணி நேரம் 49 நிமிடங்கள்தான். அதாவது 365.2424. இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தவர் போப் கிரிகோரி 13. அதனால்தான் நவீன காலண்டர் 'கிரிகோரிய காலண்டர்' எனப்படுகிறது.

# இதற்கும் அறிவியல் பூர்வமான நேரத்துக்கும் உள்ள இடைவெளி ஆண்டுக்கு 12 விநாடிகள். காலண்டரை அவர் புதுப்பித்த ஆண்டு 1582. அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே கத்தோலிக்க நாடுகள் புதிய காலண்டரை ஏற்றுக்கொண்டன.

# 1972-ல் இருந்து அணு கடிகாரத்தின் அடிப்படையிலேயே பூமியின் அதிகாரப்பூர்வ நேரம் கணக்கிடப்படுகிறது. ஆண்டு கணக்குக்கும் இதுவே அடிப்படை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x