

கொச்சியில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரையிறுதி முதல் சுற்றில் (முதல் லெக்) சென்னையின் எப்.சி. அணியும், கேரளா பிளாஸ்டரும் மோதுகின்றன.
அரையிறுதி ஆட்டங்கள் இரு சுற்றுகளாக நடத்தப்படுகின்றன. இரு அணிகளின் சொந்த ஊர் களிலும் தலா ஒவ்வொரு ஆட்டம் நடைபெறும். அதன்படி இப்போது முதல் சுற்று ஆட்டம் கொச்சியில் நடைபெறுகிறது. லீக் சுற்றில் இரு ஆட்டங்களிலும் சென்னையிடம் தோல்வி கண்ட கேரள அணி, இந்த முறை பதிலடி கொடுப்பதில் தீவிரமாக உள்ளது. எனினும் மிட்பீல்டர் இலானோவின் வருகையால் பலம் பெற்றுள்ள சென்னை அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. அதனால் கேரள அணி கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் விளையாடாத இலானோ, இந்த ஆட்டத்தில் விளையாடவிருப்பது சென்னை வீரர்களுக்கு மிகப்பெரிய நம்பிக் கையை தந்துள்ளது. சென்னை அணி நெஸ்டா, பெர்னாட் மென்டி, மிக்கேல் சில்வர்ஸ்டார் என பலம் வாய்ந்த பின்கள வீரர்களைக் கொண்டுள்ளது.
இலானோ, போயன் ஜோர்டிச், டென்சன் தேவதாஸ், ஹர்மான்ஜோத் கப்ரா ஆகியோர் நடுகளத்திலும், ஜேஜே, பல்வந்த் சிங் ஆகியோர் முன்களத்திலும் சென்னை அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இவர்களில் இலானோ, கடந்த சில ஆட்டங்களில் விளையாடாதபோதும், அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் 8 கோல்களுடன் இன்னும் முதலி டத்தில் உள்ளார்.
ஜேஜே, பல்வந்த் சிங் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். கடந்த 5 ஆட்டங்களில் இந்த இருவரில் யாராவது ஒருவர் கோலடித்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கேரள அணி எந்த விஷயத்தில் எல்லாம் பலவீனமாக உள்ளதோ, அவையனைத்திலும் சென்னை அணி பலமாக உள்ளது.
கேரள அணிக்கு குருவிந்தர் சிங், ஹெங்பர்ட், ஜிங்கான் ஆகியோர் பின்களத்தில் பலம் சேர்க்கின்றனர். அந்த அணியின் முன்களத்தைப் பொறுத்தவரையில் இயான் ஹியூம் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். இதுவரை 4 கோல் களை அடித்துள்ள அவர், இந்தப் போட்டியிலும் கேரளாவுக்கு பலம் சேர்ப்பார் என்பதில் சந்தேக மில்லை. சென்னை-கேரளா மோதிய லீக் போட்டிக்கு 61 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். அதனால் இன்றைய போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு சிறப்பாக ஆடி வெற்றி பெற கேரளா முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நேரம்: இரவு 7.00
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்