Published : 06 Dec 2014 12:13 PM
Last Updated : 06 Dec 2014 12:13 PM

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இன்று தொடக்கம்: ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனியை சந்திக்கிறது இந்தியா

35-வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியும் மோதுகின்றன.

8 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டி புவனேசுவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெறுகிறது. 14-ம் தேதி நிறைவடைகிறது. இந்த ஆண்டில் உலகக் கோப்பை போட்டியைத் தவிர எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றதோடு, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இதுதவிர சமீபத்தில் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றுள்ள சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி இந்த சீசனை வெற்றிகரமாக முடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனி, ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பையில் 2-வது இடத்தைப் பிடித்த நெதர்லாந்து, உலகக் கோப்பையில் 3-வது இடத்தைப் பிடித்த அர்ஜெண்டினா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. அதனால் இந்திய அணி கடும் சவாலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சாம்பியன்ஸ் டிராபி போட்டியைப் பொறுத்தவரையில் இந்தியா இதுவரை ஒரேயொரு வெண்கலப் பதக்கம் (1982-ல்) மட்டுமே வென்றுள்ளது. இதுதவிர கடந்த முறையோடு சேர்த்து 4 முறை 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால் இந்த முறை இந்திய அணி சாம்பியனாவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்திய வெற்றிகளால் மிகுந்த நம்பிக்கையை பெற்றுள்ள இந்திய அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமையும்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் களமிறங்குகின்றனர். தற்போதைய அணியில் உள்ளவர்களில் எஸ்.கே.உத்தப்பா, குர்ஜிந்தர் சிங், லலித் உபாத்யாய், கோல் கீப்பர் ஹர்ஜோத் சிங் ஆகியோர் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடாதவர்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் சர்தார் சிங் நடுகளத்தில் முக்கியப் பங்கு வகிப்பார். பின்களத்தில் பைரேந்திர லகரா, ரகுநாத், ரூபிந்தர் சிங் பால், குர்பஜ் சிங் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். முன்களத்தில் ரமண்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், எஸ்.வி.சுநீல், நிகின் திம்மையா, லலித் ஆகியோர் வலு சேர்க்கின்றனர். கோல் கீப்பராக துணை கேப்டன் ஸ்ரீஜேஷ் செயல்படுகிறார். உலகின் தலைசிறந்த கோல் கீப்பர்களில் ஸ்ரீஜேஷும் ஒருவர்.

சாம்பியன்ஸ் டிராபியில் 9 முறை பட்டம் வென்ற ஜெர்மனியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. கடந்த 7 ஆண்டுகளாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லாத ஜெர்மனி, இந்த முறை அதை வெல்வதில் தீவிரமாக உள்ளது. கடந்த உலகக் கோப்பையில் சந்தித்த பின்னடைவை சரிசெய்வதற்கு இதில் வென்றாக வேண்டிய கட்டாயமும் ஜெர்மனிக்கு உள்ளது. வலுவான வீரர்களைக் கொண்டுள்ள ஜெர்மனி அணியில் மோரிட்ஸ் பர்ஸ்ட், தோபியாஸ் ஹாக், ஃபுளோரியன் ஃபக்ஸ், நிகோலஸ் ஜேகோபி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் உள்ளனர்.

மிகுந்த நம்பிக்கையில் இந்திய வீரர்கள்

கடந்த ஓர் ஆண்டாக இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த தலைமைப் பயிற்சியாளர் டெரி வால்ஷ், சமீபத்தில் விலகினார். அவர் விலகிய பிறகு இந்திய அணி களமிறங்கும் முதல் போட்டி இதுவாகும். அதனால் அணியின் உயர் செயல்பாடு இயக்குநர் ஓல்ட்மான்ஸ் பயிற்சியில் இந்திய அணி எப்படி செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஓல்ட்மான்ஸ் கூறுகையில், “இந்திய வீரர்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஒவ்வொரு நடைமுறையிலும் சில தடுமாற்றங்கள் இருப்பதை நாங்கள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளோம். இந்தத் தருணத்தில் நாங்கள் முன்னோக்கி செல்லவும், சாம்பியன்ஸ் டிராபியில் முழுக் கவனம் செலுத்தவும் மட்டுமே விரும்புகிறோம்.

இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அணி மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பது எனக்கு தெரியும். அதற்கேற்றவாறு நாங்கள் விளையாட வேண்டும். அற்புதமான ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்த இந்திய வீரர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எதிரணியினருக்கு இந்திய வீரர்கள் நிச்சயம் கடுமையான சவால் அளிப்பார்கள். ஜெர்மனியை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x