Last Updated : 01 Dec, 2014 03:17 PM

 

Published : 01 Dec 2014 03:17 PM
Last Updated : 01 Dec 2014 03:17 PM

புதிய அட்டவணை வெளியீடு: 9-ம் தேதி அடிலெய்டில் முதல் டெஸ்ட்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட், அடிலெய்டில் 9-ம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தத் தொடர் வரும் 4-ம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில், உள்ளூர் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சர் தாக்கியதில் மரணமடைந்தார். பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெறுவதால் முதல் டெஸ்ட் போட்டியை தள்ளிவைத்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் புதிய அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனிலிருந்து அடிலெய்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.

முதல் டெஸ்ட், அடிலெய்டில் டிசம்பர் 9 அன்று ஆரம்பமாகிறது. பிரிஸ்பேனில் இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 17 அன்றும் சிட்னியில் நான்காவது டெஸ்ட் ஜனவரி 6-ம் தேதி அன்றும் தொடங்க உள்ளன. மூன்றாவது டெஸ்ட் மட்டும் ஏற்கெனவே அறிவித்தபடி மெல்போர்னில் டிசம்பர் 26 அன்று ஆரம்பமாகிறது. முதல் டெஸ்ட் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியின் இரண்டாவது பயிற்சி ஆட்டம் அடிலெய்டில் டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெறும் என தெரிகிறது.

புதிய அட்டவணை குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறும்போது, “இந்தக் கடினமான நேரத்தில் பிரிஸ்பேன், அடிலெய்ட், சிட்னி ரசிகர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். கடைசி நிமிட மாற்றங்களைப் புரிந்து கொண்டார்கள். டிசம்பர் 9-க்குப் பிறகு முதல் டெஸ்ட் ஆரம்பித்தால் மிகவும் நெருக்கடியாகிவிடும். அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட், பிலிப் ஹியூஸின் வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப்படும்.” என்றார்.

பவுன்சருக்குத் தடையில்லை

பிலிப் ஹியூஸ் மரணத்தால் பவுன்சர் பந்துகளுக்கு தடை விதிக்க வாய்ப்பில்லை என்று ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சர் பந்து தாக்கியதால் மரணமடைந்தார். இதனால் கிரிக்கெட்டில் பவுன்சர்களுக்குத் தடை விதிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் பிபிசி-க்கு அளித்த பேட்டியில், “இப்போது இது தொடர்பாக எதுவும் முடிவெடுக்கமுடியாது. என்னை கேட்டால், பவுன்சர்களுக்குத் தடை விதிக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்வேன். பந்தால் நெஞ்சில் அடிபட்டு இறந்தவர்களும் இருக்கிறார்கள்.” என்றார்.

இப்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் அனுமதிக்கப்படுகின்றன. டி20 போட்டியில் ஒரு ஓவரில் ஒரு பவுன்ச ருக்கு மட்டும் அனுமதி உண்டு.

பிரதமர் இரங்கல்

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், ஆஸ்திரேலிய பாராளு மன்றத்தில் பிலிப் ஹியூஸூக்கு இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஹியூஸின் மரணம் பலரைப் பாதித்துள்ளது. அவுட் ஆகாமல் 63 ரன்கள் எடுத்த நிலையில், சதம் அடிக்க இருந்தார் ஹியூஸ். அது மட்டுமில்லாமல் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குத் தேர்வாகவிருந்த சமயத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விளையாட்டு, பெருமையைத் தரவேண்டும். துக்கத்தை அல்ல. நம்மை விட்டு சீக்கிரத்தில் விலகிப் போன இளம் வீரருக்கு நாம் மரியாதை அளிப்போம்” என்றார்.

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட் - அடிலெய்ட், டிசம்பர் 9-13

இரண்டாவது டெஸ்ட் - பிரிஸ்பேன், டிசம்பர் 17-21

மூன்றாவது டெஸ்ட் - மெல்போர்ன், டிசம்பர் 26-30

நான்காவது டெஸ்ட் - சிட்னி, ஜனவரி 6-10

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x