Published : 18 Dec 2014 08:52 AM
Last Updated : 18 Dec 2014 08:52 AM

பிரிஸ்பன் டெஸ்ட்: ஹேசில்வுட் அபாரப் பந்துவீச்சு; இந்தியா 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளையின் போது இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் 23.2 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தோனியும், அஸ்வினும் சாதுரியமாக விளையாடி 57 ரன்களைச் சேர்த்ததால் இந்தியா 400 ரன்களைக் கடந்தது. ஹேசில்வுட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் அபாரமாக வீசினார். ‘நிச்சயமின்மையின் பகுதி’ என்று ஜெஃப் பாய்காட் அழைக்கும் இடங்களில் அவர் பந்தை பிட்ச் செய்தார்.

81 ரன்களில் ரஹானே சதத்தையும் தாண்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அபாரமான பந்தை வீசினார் ஹேசில்வுட். வானிலையும் சற்றே குளிரடைய, பிட்சும் நன்றாகக் காய்ந்து வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது.

ரஹானே அபாரமான ஃபார்மில் இருந்ததால்தான் ஹேசில்வுட்டின் அந்தப் பந்தை தொட முடிந்தது. நிறைய பேட்ஸ்மென்கள் அந்தப் பந்தில் பீட் ஆகியிருப்பார்களே தவிர பந்தை தொட்டிருக்க முடியாது. நல்ல அளவில் ஓரளவுக்கு பவுன்ஸ் ஆன பந்து லேட் ஸ்விங் ஆகி ரஹானேயின் மட்டை விளிம்பைத் தொட்டு ஹேடினிடம் கேட்ச் ஆனது.

தோனி களமிறங்கி முதல் 12 பந்துகளில் பெரும்பாலும் உடம்பில் வாங்கி ஆடினார். ஹேசில்வுட் முனையில் ஷேன் வாட்சன் பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் ஒரு சேஞ்ச் பவுலராகவே செயல்பட்டு வந்தார். ஆனால் ரோஹித் சர்மாவுக்கு அவர் போதும் போலும். நன்றாக வெளியே, அதாவது 5-6-வது ஸ்டம்பிற்குச் சென்ற பந்தை காலை நன்றாக முன்னே குறுக்காக போடாமல் மட்டையை மட்டும் காற்றில் தொங்க விட்டு எட்ஜ் செய்தார் ரோஹித், ஸ்மித் அதனை அபாரமாக பிடித்தார். ரோஹித் இன்னொரு முறை டெஸ்ட் போட்டிக்கு தான் லாயக்கில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

தோனி உடம்பைக் காட்டுவதை நிறுத்தி விட்டு மிட்செல் ஜான்சனை கவர் திசையில் விசாலமான ஒரு பவுண்டரியை அடித்தார். அதன் பிறகு மிட்செல் ஸ்டார்க் வந்தவுடன் புல் ஷாட், ஒரு அபாரமான நேர் டிரைவ் என்று ஆடியதோடு, ஆஃப் ஸ்டம்ப் ஸ்விங்கை மட்டுப் படுத்த நடந்து வந்து ஆடினார் தோனி.

அஸ்வின் வழக்கம் போல் அபாரமான சில ஷாட்களை ஆடினார். குறிப்பாக ஹேசில்வுட்டை பேக்ஃபுட் பன்ச் ஷாட் ஆடியது ரோஹித்தை விட அஸ்வினின் கால் நகர்த்தல் சூப்பர் என்பதை காட்டியது. அவர் ஹேசில்வுட்டையும் ஒரு ஆன் டிரைவ் ஆடினார். மொத்தம் 41 பந்துகளைச் சந்தித்த அஸ்வின் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் என்ற உருப்படியான பங்களிப்பு செய்து ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

தோனியும் ஹேசில்வுட் பந்தை லீவ் செய்ய நினைத்து எட்ஜ் செய்து 33 ரன்களில் வெளியேறினார். உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோரை நேதன் லயன் வீழ்த்தினார். லயன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தத் தொடரில் இதுவரை 3 இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்தியா 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x