

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் சயீத் அஜ்மல், முகமது ஹபீஸ் ஆகியோரை சென்னைக்கு அனுப்ப அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
அவர்களது பந்து வீச்சு முறையை பயோமெக்கானிக் முறையில் பரிசோதனை நடத்துவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அந்த இருவருக்கும் விதிக்கப்பட்ட தடையை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நீக்க வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான கிரிக்கெட் வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக அவர்கள் சென்னை வருகின்றனர். ஐசிசி-யால் அங்கீகாரம் பெற்ற பயோமெக்கானிக் பரிசோதனைக் கூடம் சென்னையில் உள்ளதால் அவர்கள் அங்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.
இந்திய விசா கிடைத்தவுடன் அவர்கள் புறப்படுவார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகாரியார் கான் கூறியுள்ளார். சர்ச்சையில் சிக்கிய இலங்கைபந்து வீச்சாளர் சேனநாயக, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச ஐசிசி சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து தங்கள் நாட்டு வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் முயற்சியில் பாகிஸ்தான் வாரியம் இறங்கியுள்ளது.