Published : 04 Dec 2014 12:41 PM
Last Updated : 04 Dec 2014 12:41 PM

ஜோதி வடிவானவனுக்கு ஜோதி லிங்க வழிபாடு

இறைவனை ஒளியேற்றி வழிபடுவது, ஒளியாகவே வழிபடுவது என்ற இரண்டு வழிபாட்டு முறைகள் உண்டு. கார்த்திகையில் ஒளியேற்றி தீப தரிசனம் செய்துவிட்டு, தைப்பொங்கலன்று ஒளியாகக் கதிரவனை வழிபடுகிறோம். இயற்கை தரும் கொடைகளை ஏற்று நம்மை வளப்படுத்திக் கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்வதே வழிபாடு. அதில் ஒன்றுதான் கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கிடல் மற்றும் ஜோதி லிங்க வழிபாடு.

ஜோதி லிங்க வழிபாடு

சிவாலய மகாபண்டபத்தில் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், அகோர இருதயம் என்ற ஐந்து சிவ மூர்த்தங்களாகப் பாவித்து ஐந்து பெரிய அகல்களை வைத்து வருண கும்ப பூஜை செய்து, சந்தனம், குங்குமம் இட்டு தூய நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பஞ்சாசன - பஞ்சமாவர்ண பூஜையை ஆதார சக்தி அனந்தாசனாய, தர்மாய, ஞானாய, வைராக்யாய, ஐஸ்வர்யாய, பத்மாய, மகாபத்மாயா என்று வரும் ஈஸ்வர மந்திரங்களைச் சொல்லி வில்வார்ச்சனை செய்ய வேண்டும். பொரி உருண்டை, வெல்ல அடை, உப்பு அடை படைத்து, தூப தீப நிவேதனம் காட்ட வேண்டும். உப தெய்வங்களாக சிறு அகல் தீபங்களைப் பாவித்து கோயிலைச் சுற்றி எடுத்து வந்து ஒவ்வொரு சந்நிதியிலும் ஒரு தீபம் வைக்க வேண்டும். கோயில் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் சொக்கர்பனைக்கு வருண கும்ப கலச நீரைத் தெளித்து, ஐந்து தீபங்களையும் கீழே ஐந்து பக்கங்களிலும் வைத்து எரியவிட வேண்டும்.

அப்போது கையில் தீப்பந்தங்களை வைத்துக் கொண்டு ‘மகாபலியோ மகாபலி’ என்று சொல்லிக்கொண்டு எரியும் சொக்கர்பனையைச் சுற்றிவர வேண்டும். எரிந்த சாம்பலை பஸ்மத்துடன் கலந்து நெற்றியில் இட்டுக்கொண்டு வீட்டுக்குச் சென்று தீபம் ஏற்றி மீண்டும் வெல்ல அடை, உப்பு அடை, நெல் பொரி ஆகியவற்றைப் படைப்பார்கள்.

சொக்கர் பனையை ஏற்றும்போது
ஏகஞ்சபாதம் தச அஷ்ட சூலம், மததீப்த கேசம்
உன்மீல நேத்ரம் சிரபஞ்ச வக்த்ரம் பஜே ஜ்யோதிர் லிங்கம்!

என்ற சிவாகம - ஜோதிலிங்கத் துதியைச் சொல்வது வழக்கம்.

விஷ்ணு கோயில்களில் தீபம் ஏற்றும்போது 12 அகல்களில் நெய்யிட்டு பன்னிரு ஆழ்வார்களை நினைத்து பெருமாள் சந்நிதி முன்பு பல்லாண்டு பாடி, தீபங்களை எடுத்துக் கொண்டு கோயிலை வலம் வந்து பனையை ஏற்றுவர்.

‘அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக இன்புறுது
சிந்தை இடுதிரியா என்புருகி ஞானச்சுடர் விளக்கு
ஏற்றினேன் நாரணர்க்கு ஞானத்தமிழ் புரிந்த நாள்’

என்று பாடுவது வைணவ ஆலய மரபு. விஷ்ணு கோயில்களில் தீபோத்ஸவம் என தீபத்திருநாளில் புனித புஷ்கரணி என்னும் திருக்குளங்களின் படிகளில் தீபம் ஏற்றுவதும் வழக்கத்தில் உள்ளது.

சொக்கர் பனை

சொக்கர் பனை என்ற சொல்லே சொக்கப் பானை, சொர்க்கப் பானை என்று மருவிவிட்டது. சுட்கப்பனை என்பதே சரி. சுட்கம் என்றால் வறட்சி. உலர்ந்து போன தென்னை, வாழை, கமுகு, பனை ஆகியவற்றின் தண்டு பாகத்தைக் கோயில் வாசலில் மூங்கில் கம்பு துணையுடன் நிற்கவைத்து கோபுரம் போல் கட்டி, அதை எரிய வைத்து இறைவனை ஜோதி ரூபமாகத் தரிசிப்பது. கந்த புராணம், சிவ புராணம், அருணகிரி புராணம் இவற்றிலும், சங்க நூல்களிலும் இறைவன் ஜோதிமயமானவன் என்று கூறப்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவதுடன் நின்றுவிடாமல் அந்நாளின் சிறப்பைக் கூறும் கதைகளையும் படித்துப் புண்ணியம் தேடிக்கொள்ளுதல் வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x