Published : 24 Dec 2014 05:13 PM
Last Updated : 24 Dec 2014 05:13 PM

2022 கத்தார் உலகக் கோப்பை அவலம்: தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள்

2022 கத்தார் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பலர் 50 டிகிரி வெயிலில் பலியாகி வருகின்றனர்.

2022ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கான உள்கட்டுமான பணிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. கத்தாருக்கு உலகக் கோப்பை போட்டிகளை நடத்த அனுமதி கொடுத்ததே பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில் அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 2 நாட்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் உயிரிழந்து வரும் செய்திகள் கடும் வேதனைகளை ஏற்படுத்தியுள்ளது.

2014ஆம் ஆண்டில் மட்டும் 2 நாட்களுக்கு ஒரு நேபாள தொழிலாளி அங்கு பலியாகி வருவதாக தி கார்டியன் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.

கார்டியன் வெளியிட்டிருக்கும் எண்ணிக்கைகளில் இந்திய, இலங்கை, வங்கதேச தொழிலாளர்கள் இல்லை. இந்நிலையில் அங்கு கட்டுமானப் பணிகளில் போதிய பாதுகாப்பு இன்மையினால் பலியாகும் தொழிலாளர்கள் விகிதம் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்டோராக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஆண்டு கார்டியன் இதழ் கத்தார் நிர்வாகிகளின் அலட்சியப் போக்கை அம்பலப்படுத்திய பிறகு கத்தார் நிர்வாகம் தகுந்த முறையில் சீரமைக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது.

இதற்காக கத்தார் அரசு சர்வதேச சட்ட நிறுவனமான டி.எல்.ஏ பைப்பர் என்ற நிறுவனத்தை விசாரணைக்காக அழைத்திருந்தது. இந்த விசாரணை அறிக்கை மே மாதம் சில பரிந்துரைகளைச் செய்திருந்தது. அதனடைப்படையில் சீரமைப்புகள் செய்யப்படும் என்று கத்தார் கூறியிருந்தது.

ஆனால் சீர்திருத்தங்கள் தங்களது தேவைக்கேற்ப மட்டுமே கத்தார் அரசு செய்துள்ளது என்றும், 50 டிகிசி செல்சியஸ் வெயிலில் கூடுதல் நேரம் வேலை வாங்குவது பற்றி எந்த ஒரு சீர்திருத்தமும் செய்யப்படவில்லை என்றும் மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் சாடியுள்ளது.

நேபாள் நாட்டு அயல்நாட்டு பணி நியமன வாரியம் கூறும்போது, ஜனவரி 2014 முதல் நவம்பர் மாதம் பாதி வரை சுமார் 157 நேபாளப் பணியாளர்கள் பலியாகியுள்ளனர் என்று கூறியுள்ளது. இதில் 75 பேர் மாரடைப்பினால் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 34 பேர் பணியிட விபத்துகளில் பலியாகியுள்ளனர்.

ஆனால் கார்டியன் கணக்குகளின் படி 188 பேர் இந்த ஆண்டில் நவம்பர் முடிய பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு 168 பேர் பலியாகியுள்ளனர்.

2012-2013 ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்திய, வங்கதேச, நேபாள் நாடுகளின் தொழிலாளர்கள் 964 பேர் பலியாகியுள்ளதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

டி.எல்.ஏ பைப்பர் நிறுவனம் அறிவுறுத்திய எந்த ஒரு சீர்திருத்தங்களையும் கத்தார் செய்யவில்லை என்றே கார்டியன் கூறியுள்ளது. பணியாளர்கள் அவர்களது முதலாளிகளின் பிடியில் உள்ளனர். பாஸ்போர்ட்கள் பிடுங்கி வைத்துக் கொள்ளப்படுகிறது. இதனை தடை செய்யப்போவதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த நடைமுறை மீதான கத்தார் அரசின் மாற்றத்தினாலும் பயனில்லை, குறைந்தது 5 ஆண்டுகள் பணியாளர்கள் தங்கள் முதலாளிகள் வசமே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

137 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கட்டுமான பணிகளில் சுமார் 1.4 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 4 லட்சம் பணியாளர்கள் நேபாள் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தோஹாவுக்கு பிழைப்பு தேடிச் செல்லும் தொழிலாளர்கள் பலருக்கு பேசிய ஊதியம் கிடைப்பதில்லை என்பதும் ஒரு புறம் அவலத்தைக் கூட்டியுள்ளது.

உலக நாடுகளும் ஃபிபா அமைப்பும் இந்த அவலத்தை கவனிக்குமா?

©Guardian News & Media 2014

தமிழில்: முத்துக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x