Last Updated : 15 Dec, 2014 03:37 PM

 

Published : 15 Dec 2014 03:37 PM
Last Updated : 15 Dec 2014 03:37 PM

அநாகரிக நடவடிக்கையில் ஈடுபட்ட 2 பாகிஸ்தான் ஹாக்கி வீரர்களுக்கு தடை: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடவடிக்கை

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த பிறகு இந்திய ரசிகர்களை நோக்கி ஆபாச சைகைகள் காண்பித்த இரு பாகிஸ்தான் ஹாக்கி வீரர்களுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதித்துள்ளது.

இதனால் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இரு பாகிஸ்தான் வீரர்களும் கலந்து கொள்ளவில்லை. புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் 4-3 என்கிற கோல் கணக்கில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. போட்டி முடிந்தபிறகு வெற்றி பெற்ற உற்சாகத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் பலர் சட்டையைக் கழற்றி ஆடினார்கள்.

ரசிகர்களை நோக்கி ஆபாச சைகைகள் காண்பித்தார்கள். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக, பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் ஷானாஸ், வீரர்களைக் கட்டுப்படுத்தி அழைத்து சென்றார். இச்சம்பவம் பற்றி இந்திய அணி கேப்டன் சர்தார் சிங் கூறும்போது, “இதுபோன்ற கொண்டாட்டங்கள் தேவையில்லாதவை. பலர் குடும்பத்துடன் வந்துள்ளார்கள். பாக். வீரர்களின் சைகைகள் மோசமாக இருந்தன. இதற்கு முன்னால் நாங்கள் பாகிஸ்தானை தோற்கடித்தபோது இதுபோல நடந்துகொண்டதில்லை” என்றார்.

பின்னர் இது தொடர்பாக பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் ஷானாஸ் வருத்தம் தெரிவித்ததால் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்) முதலில், பாகிஸ்தான் அணி வீரர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக சாம்பியன்ஸ் டிராபி இயக்குநர் தோயெர் கூறும்போது, “பாகிஸ்தான் வீரர்களின் அநாகரிக நடவடிக்கை மீதான விசாரணை நடைபெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் எஃப்ஐஎச்-ன் விதிமுறைகளை மீறியுள்ளதை ஷானாஸிடம் தெரிவித்தேன். இதில் பலர் ஈடுபட்டதால் ஒருவரை மட்டும் குற்றம் சாட்டமுடியவில்லை. வெற்றியினால் உண்டான எதிர்வினையாகவே இதைப் பார்க்கிறேன்.

ஷானாஸ் மன்னிப்பு கேட்டதோடு இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளில் தனது அணி வீரர்கள் ஈடுபடமாட்டார்கள் என்றும் உறுதியளித்தார். இதனால் மேலும் நடவடிக்கை எதுவும் தேவையில்லை” என்றார்.

ஹாக்கி இந்தியா வேண்டுகோள்

ஆனால் எஃப்ஐஎச் இந்த விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஹாக்கி இந்தியா அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. இது தொடர்பாக ஹாக்கி இந்தியாவின் தலைவர் நரீந்தர் பத்ரா கூறியதாவது: எஃப்ஐஎச் மிகவும் பலவீனமான முடிவை எடுத்துள்ளது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எஃப்ஐஎச் அமைப்பிடம் தெளிவாக சொல்லிவிட்டோம். விளையாட்டு வீரர்களின் இதுபோன்ற நடத்தைகளை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாகிஸ்தான் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் மார்ச்சில் நடைபெறும் மகளிர் வேர்ல்ட் லீக் 3-ம் சுற்று போட்டிக்குப் பிறகு 2018 ஆடவர் உலகக் கோப்பைப் போட்டி உள்பட எந்த சர்வதேசப் போட்டியையும் இந்தியாவில் நடத்த மாட்டோம். எஃப்ஐஎச்-சின் விதிமுறைகள், வீரர்களின் மோசமான நடவடிக்கைகளை அனுமதிக்கும் என்றால் ஹாக்கி போட்டிகளை மற்ற நாடுகளில் நடத்திக்கொள்ளலாம். அதேபோல பாகிஸ்தான் ஹாக்கி சங்கம் தனது மன்னிப்பை எழுத்து பூர்வமாக அளிக்காமல் இனிமேல் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம் என்றார்.

2 வீரர்களுக்கு தடை

இதைத் தொடர்ந்து, இந்திய ரசிகர்கள் மீதான பாகிஸ்தான் வீரர்களின் அநாகரிக நடவடிக்கைகளுக்காக அம்ஜத் அலி, முகமது டவுசிக் ஆகிய இரு பாகிஸ்தான் வீரர்கள் ஒரு ஆட்டத்தில் விளையாட சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தடை விதித்தது. மற்றொரு பாகிஸ்தான் வீரர் ரசூலுக்கு அதிகாரபூர்வமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த மூன்று வீரர்களும் தங்களுடைய தவறுகளை ஒப்புக்கொண்டார்கள்.

இது தொடர்பாக எஃப்ஐஎச் விடுத்த அறிக்கையில், அம்ஜத் அலி, டவுசிக் ஆகிய இருவரும் பார்வையாளர்களை நோக்கி ஆபாசமான சைகைகளை காண்பித்துள்ளார்கள். இருவரும் தங்களுடைய தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள். பாகிஸ்தான் அணியும் வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. எஃப்ஐஎச் விதிமுறைகளை மீறியதால் இரு வீரர்களுக்கும் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசூலின் நடவடிக்கைக்கும் அதிகாரபூர்வமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தண்டனையால் இரு பாகிஸ்தான் வீரர்களும் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

தண்டனை குறைவு - ஹாக்கி இந்தியா

பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து ஹாக்கி இந்தியாவின் தலைவர் நரீந்தர் பத்ரா கூறும்போது, பாகிஸ்தான் வீரர்களை ஒரு ஆட்டத்தில் மட்டும் தடை செய்ததை ஹாக்கி இந்தியா ஏற்கவில்லை இது குறைவான தண்டனை.பாகிஸ்தான் ஹாக்கி சங்கம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை இனி பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது. பயிற்சியாளரின் மன்னிப்பு மட்டும் போதாது. பாகிஸ்தான் ஹாக்கி சங்கமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x