Published : 04 Dec 2014 11:59 AM
Last Updated : 04 Dec 2014 11:59 AM

உணர்வுபூர்வமாக நடந்த பிலிப் ஹியூஸ் இறுதிப்பயணம்

பவுன்சர் பந்து தாக்கி மரணமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் உடல் அவருடைய சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக இறுதிச்சடங்கு நிகழ்ச்சி அவர் படித்த மேக்ஸ்வில்லே உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர்.

ஹியூஸின் மரணத்தால் கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் அட்டவணை மாற்றி யமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஹியூஸின் இறுதிச்சடங்கு நேற்று நடந்ததையொட்டி அவருடைய சொந்த ஊரான மேக்ஸ்வில்லேவில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரங்கத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை மேக்ஸ்வில்லே பகுதி மக்கள் பார்ப்பதற்காக அரங்கத்துக்கு வெளியே உள்ள கால்பந்து மைதானத்தில் பெரிய திரை அமைக்கப்பட்டிருந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு எந்த சிட்னி மைதானத்தில் ஹியூஸ் ஆடினாரோ அதே மைதானத்தில் அவருடைய இறுதிச் சடங்கு நிகழ்ச்சி பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது. சிட்னி, பெர்த், அடிலெய்ட் ஹோபர்ட் கிரிக்கெட் மைதானங்களிலும் பெரிய திரையில் இறுதிச்சடங்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

63 பேட்கள் வைத்து அஞ்சலி

சிட்னி மைதானத்தில் ஹியூஸ் கடைசியாக எடுத்த 63 ரன்களின் நினைவாக 63 பேட்களைக் கொண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 63 பேட்களிலும் ஹியூஸைப் பற்றிய சிறு குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. இந்தியாவில் உள்ள அனைத்து ஆங்கில செய்தி சேனல்களும் ஹியூஸ் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பின.

பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், எதிர்க்கட்சி தலைவர் பில் ஷார்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விதிமுறைப்படி பிரதமர் முதல் வரிசையில்தான் அமர்ந்திருக்கவேண்டும். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இடமளித்து, மூன்றாம் வரிசையில் அமர்ந்து கொண்டார் டோனி அபாட். இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி, ரோஹித் சர்மா, இயக்குநர் ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கான முழு செலவையும் ($100000) கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டது.

நெஞ்சை உருக்குவதாக…

ஹியூஸின் குடும்பத்தினர் அரங்கில் நுழைந்தபோது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். ஆஸ்திரேலியா மற்றும் மாநில அணிகளில் விளையாடும்போது ஹியூஸூக்கு வழங்கப்பட்ட தொப்பிகள் அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பாதிரியார் மைக்கேல் அல்காக், நாம் அனைவரும் ஹியூஸின் 26 வருட வாழ்க்கையைக் கொண்டா டுவதற்காக ஒன்றுகூடியுள்ளோம் என்று கூறி கூட்டத்தை ஆரம்பித்தார். பிறகு கிறிஸ்தவ மதச் சடங்குகள் முறையாக நடைபெற்றன. ஹியூஸைப் பற்றிய நினைவலைகளை அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அரங்கத்தில் பகிர்ந்து கொண்டார்கள். அனைவருடைய பேச்சும் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

நினோ (ஹுயூஸின் உறவினர்):

தன் சகோதரர் ஜேஸனால் கிரிக்கெட் பழகினார் ஹியூஸ். பவுலிங் மெஷின் வாங்கும்வரை ஹியூஸின் தந்தை கிரேக் தான் பவுலிங் போட்டு ஹியூஸுக்குப் பயிற்சி கொடுப்பார். ஹியூஸ் தினமும் தன் அம்மாவுக்கு போன் செய்து பலவிஷயங்களிலும் ஆலோசனை கேட்டுக்கொள்வார். சிட்னிக்கு இடம்பெயர்ந்த பிறகு, சமையல் மற்றும் சுத்தம் செய்வதில் கஷ்டப்பட்டாலும் துணியை அயர்ன் செய்வதில் திறமையை வளர்த்துக் கொண்டார்.

ஜேஸன் (சகோதரர்):

ஹியூஸ், உன்னைவிட சிறந்த தம்பி எனக்கு கிடைக்கமாட்டார். உனக்கு நான் இறுதிவிடை கொடுக்க வேண்டிய நிலை வரும் என்று நினைக்கவேயில்லை.

மேகன் (சகோதரி):

உன்னை என் சகோதரனாகவும் என் நெருங்கிய நண்பனாகவும் ஹீரோவாகவும் அழைப்பதில் மிகவும் பெருமைப் படுகிறேன். உன் வாழ்க்கையில் மாற்றங்கள் வந்தபோது நீ மட்டும் மாறவேயில்லை. அதை என்னால் மறக்கவே முடியாது. இனி உன் சகோதரியை உன்னால் அணைக்கமுடியாமல் போனா லும் நம்மிடையே உள்ள நினைவுகள் நம்மை எப்போதும் இணைத்திருக்கும். ஒருநாளும் உன்னை நினைக்காமல் இருக்கமாட்டேன் ஹியூஸ்.

கோரே அயர்லேன்ட் (நெருங்கிய நண்பர்):

தன் பண்ணையில் இருந்த ஆங்கஸ் மாட்டு வகை மீது ஹியூஸுக்கு மிகவும் பிரியம். அதைப் பற்றி அதிக ஆராய்ச்சி செய்து வந்தார். ஒவ்வொரு முறை சதம் அடித்தபோதும் தனது மாட்டுப் பண்ணையில் புதிதாக ஒரு மாடு வாங்குவார். இதனால் பண்ணையில் மாடுகளின் எண்ணிக்கை அதிகமானது. நாளுக்கு நாள் கால்நடை வளர்ப்பில் நிபுணராகிக் கொண்டிருந்தார். கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு கால்நடைப் பண்ணை தொடர்பான தொழிலில் ஈடுபடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

‘கார்ட் ஆஃப் ஹானர்’

இதன்பிறகு ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேன்ட் ஆகியோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக பாதிரியார் மைக்கேல் அல்காக், நம் சகோதரர் பிலிப் ஜோயல் ஹியூஸ், தன் ஓய்வு இடத்துக்கு செல்லட்டும் என்று சொல்லி கூட்டத்தை முடித்தார்.

அதன்பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் மைக்கேல் கிளார்க், ஆரோன் பிஞ்ச், ஹியூஸ் பவுன்சரில் அடிபடும்போது மறுமுனையில் இருந்த பேட்ஸ்மேன் டாம் கூப்பர், ஹியூஸ் தந்தை கிரேக், சகோதரர் ஜேஸன், நண்பர்கள் கோரே அயர்லேன்ட், மிட்சல் லொனெர்கன், மேத்யூ டே ஆகிய எட்டு பேரும் ஒன்று சேர்ந்து ஹியூஸின் சவப்பெட்டியை சுமந்தபடி மெல்ல நடந்து சென்றனர்.

அப்போது எல்டன் ஜானின் ’டோண்ட் லெட் த சன் கோ டவுன் ஆன் மீ’ என்கிற பாடல் அரங்கில் ஒலித்தது. ஹியூஸின் தந்தை அழுதபடியே மகனின் உடலைத் தூக்கிச் சென்றார். கிளார்க்கும் கண்ணீருடன் காணப்பட்டார். பிறகு சவப்பெட்டி, சவ ஊர்தியில் வைக்கப்பட்டது. கடைசியாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஹியூஸின் உடலுக்கு ‘கார்ட் ஆஃப் ஹானர்’ (இரு புறம் அணிவகுத்து நின்று) கொடுத்து மரியாதை செலுத்தினார்கள்.

உடல் அடக்கம்

மேக்ஸ்வில்லே மக்கள் ஹியூஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஹியூஸின் உடலை எடுத்துச் சென்ற சவ ஊர்தி ஒவ்வொரு தெருவாக மெல்ல நகர்ந்து சென்றது. சவ ஊர்திக்குப் பின்னே ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கோலி, டங்கன் பிளட்சர், ரவி சாஸ்திரி, கிளென் மெக்ரா, கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ராட் மார்ஷ் உள்பட பல கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் அதிகாரிகளும் துக்கம் அனுஷ்டித்தபடி அமைதியாக பின்னே சென்றார்கள். இறுதி ஊர்வலம் மேக்ஸ்வில்லே எக்ஸ் சர்வீசஸ் கிளப்பில் முடிவடைந்தது. பிறகு குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்ட தனிப்பட்ட நிகழ்ச்சியில், பிலிப் ஹியூஸ் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அபாட்டின் உணர்வுகளுக்கு மரியாதை அளித்த சேனல் 9

பிலிப் ஹியூஸின் மரணத்துக்கு காரணமான பவுன்சரை வீசிய சீன் அபாட், பெரும் துயரத்துக்கு மத்தியில் பிலிப் ஹியூஸின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மேக்ஸ்வில்லேவுக்கு வந்தார். அப்போது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை உலகம் முழுவதும் நேரடி ஒளிரபரப்பு செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த சேனல் 9 தொலைக்காட்சி, சீன் அபாட்டின் உணர்வுகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரை படம்பிடிக்கவில்லை.

ஹியூஸின் ஆன்மா என்னை விட்டுப் போகாது: கிளார்க் உருக்கம்

பிலிப் ஹியூஸின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், ஹியூஸின் நெருங்கிய நண்பருமான மைக்கேல் கிளார்க் புகழஞ்சலி செலுத்தியபோது பேசியதாவது:

பிலிப் ஹியூஸ், தன் சொந்த ஊரான மேக்ஸ்வில்லே மீது எப்போதும் பெருமிதப்படுவார். அது ஏன் என்பது இப்போது தெரிந்துள்ளது. ஹுயூஸை நான் எப்போதும் தேடுவேன். இது பைத்தியகாரத்தனமாகத் தெரிந்தாலும் அவருடைய தொலைபேசி அழைப்புக்காக நான் எந்த நிமிடமும் காத்திருப்பேன். அவர் முகத்தைக் காணவும் ஆசைப்படுகிறேன். இதைத்தான் ஆன்மா என்பதா? அப்படியென்றால் அவர் ஆன்மா இன்னமும் என்னிடம் உள்ளது. அது ஒருபோதும் என்னைவிட்டுப் போகாது.

கடந்த வியாழக்கிழமை சிட்னி ஆடுகளத்தில் நடந்துகொண்டிருந்தபோது, அந்தப் புல்வெளிப் பரப்பில் ஹியூஸ் என்னுடனும் இதர அணி வீரர்களுடனும் ஏராளமான கூட்டணி அமைத்து ரன்கள் குவித்தது ஞாபகத்துக்கு வந்தது. சிறுவயதில் கண்ட கனவினை அங்கு வாழ்ந்தோம்.

அந்த மைதானத்தில்தான் அவருடைய ஷாட்களுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். அந்த மைதானத்தின் எல்லைக்கோட்டுக்குத்தான் அவர் பந்துகளை மீண்டும் மீண்டும் விரட்டினார். அதே மைதானத்தில்தான் அவர் எழமுடியாத அளவுக்கு வீழ்ந்தார். நான் முழங்காலிட்டு புற்களைத் தொட்டேன். சத்தியமாக சொல்கிறேன். அப்போது அவர் என்னுடன் இருந்தார். நான் சரியாக இருக்கிறேனா என்று சோதித்துப் பார்த்தார். தேநீர் இடைவேளை வரை நாம் இன்னும் தொடர்ந்து ஆடவேண்டும் என்றார். நான் மோசமாக ஆடிய ஷாட்டைப் பற்றி பேசினார். அன்று இரவு என்ன சினிமா பார்க்கலாம் என்று சொன்னார். அவருடைய கால்நடைகளைப் பற்றி பேசினார். சிட்னி மைதானத்தில் ஹியூஸின் ஆன்மா இருக்கிறது. அதனால் எப்போதும் சிட்னி எனக்குப் புனிதமான மைதானம்.

அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து புகழஞ்சலிகள் வந்து குவிந்துள்ளன. ஹியூஸ் எப்போதும் மக்களை ஒன்றிணைப்பார். மக்கள், கிரிக்கெட் மீதுள்ள காதலை கொண்டாட நினைப்பார். கராச்சியில் ஒரு சிறுமி மெழுகுவர்த்தியுடன் ஹியூஸுக்கு அஞ்சலி செலுத்துகிறார். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களான டெண்டுல்கர், லாரா, வார்ன் ஆகியோர் ஹியூஸின் மரணத்துக்குத் துக்கப்படுகிறார்கள். இதைத்தான் கிரிக்கெட்டின் உணர்வு என்பதா? கிரிக்கெட் உணர்வு நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.

ஹியூஸின் ஆன்மா இனி கிரிக்கெட்டின் ஒரு அங்கமாகிவிட்டது. நாம் அனைவரும் நேசிக்கும் கிரிக்கெட்டின் பாதுகாவலராக அது செயல்படும். அது சொல்வதை நாம் கேட்க வேண்டும். அதைக் கொண்டாடவேண்டும். அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

என் சகோதரனே, அமைதியாக ஓய்வெடு! நான் உன்னை மைதானத்தில் சந்திக்கிறேன் என அழுதபடி பேசினார் கிளார்க்.

ட்விட்டரில் அஞ்சலி

பிலிப் ஹியூஸின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் தங்களது இரங்கலையும், வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டனர்.

நரேந்திர மோடி:

பிலிப் ஹியூஸின் மரணம் உலகையே உலுக்கியிருக்கிறது. அவருக்கு இன்று இறுதிச்சடங்கு. நாங்கள் உங்களோடு இருக்கும் தருணத்தை தவறவிடுகிறோம் ஹியூஸ்.

சச்சின்:

ஹியூஸ், கற்றுக் கொள்வதில் உங்களுக்கு இருந்த ஆர்வமும், துல்லியமான இலக்கை நோக்கிய உங்களுடைய பயணமும் எங்களை கவர்ந்தது என குறிப்பிட்டுள்ள சச்சின், 2013 ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடியபோது ஹியூஸுடன் இணைந்து எடுத்துக் கொண்ட படத்தையும் வெளியிட்டுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x