இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கொல்கத்தா மீண்டும் வெல்லும்: கங்குலி நம்பிக்கை

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கொல்கத்தா மீண்டும் வெல்லும்: கங்குலி நம்பிக்கை
Updated on
1 min read

இந்திய சூப்பர் லீக் போட்டியில் கொல்கத்தா அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் என்று அட்லெடிகோ டி கொல்கத்தா அணியின் சக உரிமையாளர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) இறுதிப் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதன்மூலம் ஐஎஸ்எல் போட்டியின் முதல் சாம்பியன் என்ற பெருமையும் அந்த அணிக்கு கிடைத்தது.

போட்டியை வென்ற கொல்கத்தா அணி, கோப்பையுடன் நேற்று கொல்கத்தாவுக்கு வந்தபோது விமான நிலையத்தில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். பார்க் சர்க்கஸில் உள்ள ஒரு மாலில் கொல்கத்தா அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த வருடம் ஐபிஎல், ஐஎஸ்எல் என இரண்டிலும் கொல்கத்தா தான் சாம்பியன் என்று ரசிகர்கள் உற்சாகமாக அட்லெடிகோ டி கொல்கத்தா அணி வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். விழாவில் பேசிய கங்குலி, “எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

3 மாதங்களுக்கு முன்னால் எங்கள் பயணம் தொடங்கியது. இப்போது ஐஎஸ்எல் போட்டியின் முதல் சாம்பியன் ஆகியுள்ளோம். இது தொடக்கம்தான். மேலும் பல வெற்றிகளைக் குவித்து சாம்பியன் ஆவோம். அடுத்த வருடம் இன்னும் பலமான அணியாக நாங்கள் இருப்போம்” என்றார். கொல்கத்தா அணியின் மற்றொரு உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா பேசும்போது, “சனிக்கிழமை இரவு 9.01 மணிக்கு கொல்கத்தா, ஐஎஸ்எல் சாம்பியனானது. 9.02க்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியிடமிருந்து பாராட்டு கிடைத்தது” என்றார்.

மறக்கமுடியாத 20 நிமிடங்கள்: ‘ஹீரோ’

ரபீக் இறுதிப் போட்டியில் கடைசி நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில் மாற்று ஆட்டக்காரர் முகமது ரபீக் கோலடித்து கொல்கத்தாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதுபற்றி ரபீக் கூறும்போது, “எல்லோருக்கும் இறுதிப் போட்டியில் ஆடவேண்டும் என்கிற ஆவல் இருக்கும். நான் அதற்காக கடுமையாக உழைத்ததை பயிற்சியாளர் கவனித்துள்ளார். வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாகப் பயன்படுத்தவேண்டும் என்று நினைத்தேன். என்னை ஹீரோ ஆக்கியதற்கு கடவுளுக்கு நன்றி. இறுதிப் போட்டியில் நான் ஆடிய 20 நிமிடங்களும் என் வாழ்க்கையில் மறக்கமுடியாதவை” என்றார்.

செப்டம்பர் - டிசம்பர்

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயலாளர் குஷால் தாஸ் கூறும்போது: “இந்த ஆண்டு ஐஎஸ்எல் போட்டியை செப்டம்பர் 15-ல் ஆரம்பித்து டிசம்பர் 15-க்குள் முடிக்க நினைத்தோம். ஆனால் எங்களால் அக்டோபரில்தான் தொடங்க முடிந்தது. அடுத்த வருடம் செப்டம்பர் 15 - டிசம்பர் 15 காலகட்டத்தில் நடத்தி முடிப்போம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in