

முதல் டெஸ்ட் போட்டியில் பிரமாதமாக ஆடிய விராட் கோலி, இந்திய அணியின் முழுநேர கேப்டன் ஆகவேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
நடந்துமுடிந்த அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி தோற்றுப் போனாலும் அதன் கேப்டன் விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி இரு சதங்கள் எடுத்தார். இதனால் கிரிக்கெட் உலகம் கோலியை வெகுவாக புகழ்ந்து வருகிறது. இதனையடுத்து, கோலி இந்திய அணியின் முழு நேர கேப்டன் ஆகவேண்டும் என்கிற கோரிக் கையும் எழுந்துள்ளது.
இதுபற்றி இயன் சாப்பல் கூறியதாவது: அடிலெய்டு டெஸ்டில் கோலி ஆடிய விதத்தைக் கண்டு, இதுதான் கோலி முழுநேர கேப்டன் ஆகவேண்டிய சரியான தருணம் என்று இந்திய தேர்வுக்குழு யோசித்திருக்கும். ஒரு கேப்டனாக காலாவதி தேதியைக் கடந்துவிட்டார் தோனி. இந்திய கேப்டனை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரம்.
கோலி, பவுன்சரால் ஹெல்மெட்டில் தாக்கப்பட்ட பிறகு, மிகவும் தைரியத்துடன் ஆடினார். அவருடைய சதம், ஆஸ்திரேலியாவுக்கு ஒரு தகவலை சொல்லியுள்ளது – கடந்தமுறை போல எங்களை அவ்வளவு சுலபமாக வீழ்த்தமுடியாது என்று. ஆனால் அடிலெய்டில் கோலி உணர்ச்சிவசப்பட்டது மட்டும் அவருடைய தலைமைப் பண்பு மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இளைஞர்களை கொண்ட இந்திய அணி மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஆடிவருகிறது. இதன் விளைவாக அடிலெய்டில் நான்காவது நாளன்று கோலி உணர்ச்சிவசப்பட்டார். இதனால் ஒரு கேப்டனாக அவர் எந்தளவுக்குப் பொறுமையுடனும் பக்குவத்துடனும் நடந்துகொள்வார் என்கிற கேள்வி எழுந்துள்ளது என்றார்.
4-0 கிடையாது
கோலியின் இரு சதங்கள் மற்றும் கேப்டன் பதவி பற்றி மார்க் டெய்லர் கூறும்போது: அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு முன்பு கோலியிடம் பேசினேன். ஆஸ்திரேலியாவில் விளையாடுவது தொடர்பாக அவர் நன்கு அறிந்துள்ளார். ஆடுகளத்தில் போட்டித்தன்மையுடன் ஆடவேண்டியதை உணர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் லெக் ஸ்பின்னர்கள் நிறைய விக்கெட்டுகள் எடுத்திருப்பதால் அதை முன்வைத்து கரண் சர்மாவைத் தேர்ந்தெடுத்தார். அஸ்வின், கரண் சர்மாவை விடவும் நன்றாக பவுலிங் செய்திருப்பார் என்றாலும் அது நல்ல முடிவுதான்.
நிச்சயம் இது அருமையான டெஸ்ட் தொடராக அமையும் என்று நினைக்கிறேன். இதுமாதிரியான ஒரு டெஸ்ட் தொடருக்காகத்தான் காத்திருந்தோம். 2011-ல் இந்திய அணி 4-0 என ஆஸ்திரேலியாவில் தோற்றது. பிறகு இந்தியாவில் 4-0 என ஆஸ்திரேலியா தோற்றாலும் இந்தமுறை அப்படி நடக்காது என எண்ணுகிறேன். முதல் டெஸ்டில் இந்திய அணி மொத்தமாக 12 விக்கெட்டுகளைத்தான் எடுத்துள்ளது. இது நிச்சயம் கோலிக்கு கவலையளித்திருக்கும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது.
ஒருமுறைகூட ஆல்அவுட் செய்யமுடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து புதிதாக முயற்சி செய்துகொண்டே இருந்தார் கோலி. இதுபோன்ற தருணங்களை எப்படி கையாள்கிறார் என்பதில்தான் ஒரு கேப்டனாக அவருடைய எதிர்காலம் அடங்கியுள்ளது.
கோலி, போட்டி மனப்பான்மையுடன் இருப்பதில் தவறில்லை. ஆனால் சில சம்பவங்களின்போது அவர்தான் சமாதானம் செய்துவைக்கவேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, இது தொடர்பாக கோலி கவனம் செலுத்தவேண்டும் என்றார்.