Last Updated : 14 Apr, 2014 11:14 AM

 

Published : 14 Apr 2014 11:14 AM
Last Updated : 14 Apr 2014 11:14 AM

சென்னை லீக்: ஒரே கோலில் தெற்கு ரயில்வே வெற்றி

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் தெற்கு ரயில்வே அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய உணவுக் கழக (எப்சிஐ) அணியைத் தோற்கடித்தது.

20-வது நிமிடத்தில் ரயில்வே அணி ஒரு கோல் அடித்தது. அதன்பிறகு கடைசி வரை ஆட்டம் மந்தமாகவே செல்ல கோல் எதுவும் விழவில்லை.

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீனியர் டிவிசன் லீக்கில் தெற்கு ரயில்வே அணி, எப்சிஐ அணியை சந்தித்தது. தெற்கு ரயில்வே அணி தனது முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணியைத் தோற்கடித்திருந்ததால், இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களின் ஆட்டம் அமைய வில்லை. இதேபோல் எப்சிஐ அணியும் ஆரம்பத்தில் வேகம் காட்டவில்லை.

12-வது நிமிடத்தில் ரயில்வே ஸ்டிரைக்கர் ரிஜுவின் கோலடிக்கும் வாய்ப்பை எப்சிஐ கோல் கீப்பர் மணிகண்டன் முறியடித்தார்.

அதைத் தொடர்ந்து எப்சிஐயின் ஸ்டிரைக்கர் ரவீந்திரன் பாஸ் செய்த பந்தை மற்றொரு ஸ்டிரைக்கர் சந்தோஷ் குமார் கோல் கம்பத்தை நோக்கி திருப்ப, அதை ரயில்வே கீப்பர் ஜசீர் முகமது தகர்த்தார்.

ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்த ரிஜுவின் வசம் பந்து செல்ல அவர் அதை கோல் கம்பத்தை நோக்கி நகர்த்தினார்.

அதைத் தடுக்க முயற்சித்த எப்சிஐ தடுப்பாட்டக்காரர் ஜான் பாலை எளிதாக பின்னுக்குதள்ளி இடது காலால் அசத்தலாக உதைத்து கோலடித்தார் ரிஜு. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது ரயில்வே அணி.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தைப் பொறுத்தவரையில் ரயில்வே அணியில் ஸ்டிரைக்கர் ரிஜு, மிட்பீல்டர்கள் சிராஜுதீன், சார்லஸ் ஆனந்தராஜ் ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும், மற்றொரு மிட்பீல்டரான ஜோசப் தொடர்ந்து சொதப்பினார். இதனால் சிராஜுதீன், ஆனந்த்ராஜ் ஆகியோர் கூடுதல் முயற்சி எடுத்து ஆடவேண்டிய நிலை ஏற்பட்டது.

ரயில்வேயின் “லெப்ட் விங்கர்” ஸ்வராஜ் கோல் கம்பத்தின் அருகில் தனது அணியின் ஸ்டிரைக்கர் இளமுருகனுக்கு ஒரு பந்தை சூப்பராக “பாஸ்” செய்தார். ஆனால் அந்த எளிய வாய்ப்பை அவர் கோட்டைவிட, வலது மிட்பீல்டர் சிராஜுதீன் முன்னேறி வந்து அடித்தார். ஆனால் பந்து வெளியில் செல்லவே, அந்த வாய்ப்பு மயிரிழையில் நழுவிப்போனது.

இதன்பிறகு எப்சிஐயின் ஜான் பால், ரயில்வே ஸ்டிரைக்கர் ரிஜுவை வேண்டுமென்றே கீழே தள்ளியதைத் தொடர்ந்து “ரெட் கார்டு” காண்பித்து ஜான் பாலை வெளியேற்றினார் நடுவர்.

அதனால் எப்சிஐ அணி எஞ்சிய நேரத்தில் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரயில்வே அணி மேலும் கோலடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது கடைசி வரை நடக்கவில்லை. இதனால் ரயில்வே 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. எப்சிஐ அணி தோற்றாலும், அந்த அணியின் கோல் கீப்பர் மணிகண்டன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் ரயில்வேயின் சில கோல் வாய்ப்புகளை அற்புதமாகத் தகர்த்தது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே அணி தான் விளையாடிய இரு ஆட்டங் களிலும் வெற்றி கண்டுள்ள அதேவேளையில், எப்சிஐ அணி தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.

எஸ்.சி.ஸ்டெட்ஸ் வெற்றி

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக் போட்டியில் எஸ்.சி.ஸ்டெட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் எஸ்பிஐ அணியைத் தோற்கடித்தது. ஸ்டெட்ஸ் தரப்பில் சரத்குமார் 30-வது நிமிடத்திலும், திலிபன் 76-வது நிமிடத்திலும் கோல டித்தனர். எஸ்பிஐ தரப்பில் பாலாஜி 42-வது நிமிடத்தில் கோலடித்தார்.

இன்றைய ஆட்டங்கள்

முதல் டிவிசன் லீக்

சேலஞ்சர்ஸ் யூனியன் - வருமான வரித் துறை

நேரம்: பிற்பகல் 2.30

சீனியர் டிவிசன் லீக்

ரிசர்வ் வங்கி-ஏரோஸ் எப்.சி.

நேரம்: மாலை 4.15

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x