Published : 04 Dec 2014 08:34 AM
Last Updated : 04 Dec 2014 08:34 AM

‘அரண்மனை’ பட விவகாரம்: இயக்குநர் சுந்தர்.சி மீது தயாரிப்பாளர் முத்துராமன் போலீஸில் புகார்

‘அரண்மனை’ திரைப்பட விவகாரத்தில் ரூ.50 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றுவதாக சுந்தர்.சி மீது திரைப்பட தயாரிப்பாளர் முத்துராமன் புகார் கொடுத்துள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர் முத்துராமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

நடிகர் ரஜினிகாந்தை வைத்து நான் இயக்கிய திரைப்படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. இந்த படத்தின் உரிமை என்னிடம் உள்ளது. இந்த கதையை இந்தி மற்றும் தெலுங்கில் மீண்டும் எடுக்க நான் திட்டமிட்டிருந்தேன். இந்நிலையில் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை திரைப்படத்தின் கதை ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதையை தழுவியே இருந்தது.

இதுகுறித்து வழக்கு தொடரப்போவதாக சுந்தர்.சியிடம் நான் கூறியபோது, “பிரச்சினை எதுவும் வேண்டாம். இந்த கதைக்காக ரூ.50 லட்சம் தருகிறேன். மேலும் ‘அரண்மனை’ படத்தை தெலுங்கு, கன்னடத்தில் ரிலீஸ் செய்து அதன் லாபத்தில் பங்கு தருகிறேன்” என்று கூறினார்.

அவர் கூறியதன்பேரில் நானும் ‘அரண்மனை’ திரைப்படம் வெளிவந்தபோது எந்த பிரச்சினையும் செய்யவில்லை. ஆனால் சுந்தர்.சி கூறியபடி எனக்கு ரூ.50 லட்சம் பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து அவரிடம் பலமுறை கேட்டும் பதில் இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை பெற்றுக்கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x