Last Updated : 02 Dec, 2014 09:17 PM

 

Published : 02 Dec 2014 09:17 PM
Last Updated : 02 Dec 2014 09:17 PM

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா, தெ.ஆ., ஆஸ்திரேலியா, நியூசிலாந்து: சேவாக் கணிப்பு

2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற வாய்ப்பு என்று அதிரடி வீரர் சேவாக் கணித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் விளையாடுகின்றனர். தென் ஆப்பிரிக்காவும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அங்கு விளையாடியது. அனைத்துப் போட்டிகளுமே நெருக்கமான ஆட்டங்கள். அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணிப்பது கடினம் என்றாலும், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பைக்கு முன்னதாக டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. எனவே வீரர்களுக்கு தங்களை அந்தப் பிட்ச்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது ஒன்றும் பெரிய கடினமல்ல.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிட்ச்கள் ஒரே மாதிரிதான் இருக்கும், அங்கு சிறப்பாக பேட்டிங், பவுலிங் இரண்டையுமே செய்ய பிட்ச்கள் அமைக்கப்படும். கிரிக்கெட் ஆட ஆஸ்திரேலியா சிறந்த இடம். நல்ல வேகமான ஆட்டக்களங்களில் பந்துகள் எழும்பும், பேட்டிற்கு பந்துகள் அருமையாக வரும். அங்கு பேட்டிங், பவுலிங் இரண்டையுமே மகிழ்ச்சியாக நிறைவேற்ற முடியும்.

டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்தில் போல் அல்லாமல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாகவே விளையாடும் என்று கருதுகிறேன்.

2015 உலகக்கோப்பையில் தனது வாய்ப்பு பற்றி...

30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் என் பெயர் இடம்பெறும் என்று நான் நினைக்கிறேன். கிரிக்கெட் விளையாடும் எந்த ஒரு வீரரும் தன் நாட்டிற்காக உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆட விருப்பம் கொள்வார்கள். இந்த உலகக் கோப்பையில் நான் விளையாடுவேன் என்றே கருதுகிறேன்.

நான் தொடக்க வீரராக களமிறங்கினாலும், சமீபமாக ஒன்றாம், இரண்டாம், மூன்றாம், ஏன் 4ஆம் நிலையில் கூட களமிறங்கி ஆடி வருகிறேன். எந்த நிலையில் ஆடினால் என்ன? என்னால் ரன்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பந்தை கடைசி வரை பார்க்கவேண்டும், என் பகுதிக்கு வாகாக இருந்தால் அடிக்க வேண்டும். டெல்லி அணிக்காக வரும் காலத்தில் 3 அல்லது 4ஆம் நிலையில் களமிறங்குவேன்.

உலகக் கோப்பையில் இந்திய அணியின் வாய்ப்பு பற்றி...

2011-ஆம் ஆண்டு உலக சாம்பியன்கள் ஆனோம். கோப்பையை தக்க வைக்க வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. நல்ல அணி நம்மிடம் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் நன்றாகவே விளையாடி வருகிறோம்.

2011 உலகக்கோப்பை வெற்றி பற்றி...

நாக் அவுட் சுற்றில், அதாவது காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி வெற்றிகளை இரவு முழுதும் கொண்டாடினோம். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற கடினமான அணிகளுக்கு எதிராக ஆடினோம். அந்த உலகக் கோப்பை முழுதுமே மகிழ்ச்சியாக ஆடினோம், ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்தனர்.

இறுதிப் போட்டி பற்றி அதிகம் கவலைப்படவில்லை, காரணம் அதற்கு முன்பு 2 ஆண்டுகாலமாக இலங்கைக்கு எதிராக வெற்றிகளைக் குவித்துள்ளோம் என்பது எங்களுக்கு பெரிய பக்கபலமாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் போட்டியே சற்று கவலை அளித்தது. 260 ரன்களையே அடித்திருந்தோம், பிட்சும் பேட்டிங்கிற்கு வாகாக இருந்தது. அந்தப் பிட்சில் 260 ரன்கள் போதாது. ஆனால் பவுலர்கள் அருமையாக, ஆக்ரோஷமாக வீசினர். ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், யுவ்ராஜ் சிங் ஆகியோர் போட்டியை வெற்றிபெற்று தந்தனர்.

இவ்வாறு கூறினார் சேவாக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x