

மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய தமிழகம், 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 144 ரன்கள் குவித்த மத்தியப் பிரதேச வீரர் சக்சேனா, பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டு 4 விக்கெட் வீழ்த்தினார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மத்தியப் பிரதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 142.4 ஓவர்களில் 432 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 37 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. அபிநவ் முகுந்த் 37, பிரசன்னா 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
248-க்கு ஆல்அவுட்
3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக அணியில் முகுந்த், முந்தைய நாள் எடுத்திருந்த ரன்களோடு சக்சேனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் பிரசன்னாவுடன் இணைந்தார் சுஷீல். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் தமிழக அணி 150 ரன்களைக் கடந்தது. தமிழகம் 197 ரன்களை எட்டியபோது சுஷீல் 45 ரன்களில் (84 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன்) ஆட்டமிழந்தார். சுஷீல்-பிரசன்னா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தது.
இதன்பிறகு தமிழகத்தின் சரிவு தவிர்க்க முடியாததானது. ஒருபுறம் பிரசன்னா சிறப்பாக ஆடியபோதும், மறுமுனையில் ரங்கராஜன் 16, எல்.பாலாஜி 6, ஆர்.எஸ்.ஷா 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக பிரசன்னா 187 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, 83.1 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழகம். மத்தியப் பிரதேசம் தரப்பில் அங்கித் சர்மா 5 விக்கெட்டுகளையும், சக்சேனா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தமிழகம் பாலோ-ஆன்
முதல் இன்னிங்ஸில் 184 ரன்கள் பின்தங்கிய தமிழக அணி பாலோ-ஆன் பெற்றது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய தமிழக அணியில் பரத் சங்கர்-அபிநவ் முகுந்த் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22.1 ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்தது. 68 பந்துகளைச் சந்தித்த சங்கர் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து முகுந்துடன் இணைந்தார் அபராஜித். இந்த ஜோடியும் ஓரளவு சிறப்பாக ஆட, தமிழக அணி 100 ரன்களைக் கடந்தது.
இதன்பிறகு முகுந்த் 90 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தமிழக அணி 136 ரன்களை எட்டியபோது அபராஜித் 33 ரன்களில் வெளியேறினார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 19, இந்திரஜித் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
மத்தியப் பிரதேசம் தரப்பில் அங்கித் சர்மா 2 விக்கெட்டுகளையும், சக்சேனா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட தமிழகம் இன்னும் 32 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கடைசி நாளான இன்று தமிழகம் நிலைத்து நின்று ஆடினாலொழிய இந்தப் போட்டியை டிரா செய்ய முடியாது. அதேநேரத்தில் மத்தியப் பிரதேச அணி காலையிலேயே தமிழகத்தின் எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற முயற்சிக்கும்.
சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்: மத்தியப் பிரதேசம்-432 (சக்சேனா 144, பண்டேலா 104, ஹர்பிரீத் சிங் 65, அங்கித் சர்மா 62*, ரங்கராஜன் 7வி/135).
தமிழகம்-248 (பிரசன்னா 74, சுஷீல் 45, இந்திரஜித் 39, முகுந்த் 37, அங்கித் சர்மா 5வி/103, சக்சேனா 4வி/74).
2-வது இன்னிங்ஸ்: தமிழகம்-152/3 (அபிநவ் முகுந்த் 48, பரத் சங்கர் 45, அபராஜித் 33, தினேஷ் கார்த்திக் 19*, அங்கிச் சர்மா 2வி/73).