Published : 03 Dec 2014 08:15 AM
Last Updated : 03 Dec 2014 08:15 AM

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: திமுக எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கு கிறது. இதில், பால் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட் டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்கு கிறது. இந்நிலையில், பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் சட்டப் பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், இன்று காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. இதில், கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது, என்னென்ன அலுவல் களை எடுத்துக் கொள்வது என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப் படும்.

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பால் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பல எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. காவிரியில் கர்நாடகமும் பம்பை ஆற்றில் கேரளமும் அணை கட்ட முயற்சிப்பது, முல்லை பெரியாறு அணை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேரவையில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

பால் விலை உயர்வு, ஆவின் பாலில் கலப்படம், மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவு, கனிமவள பிரச்சினை, மின்வெட்டு, மின்சார கொள்முதல் மற்றும் பருப்பு கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டுகள், தருமபுரி மருத்துவ மனையில் பச்சிளம் குழந்தைகள் மரணம், சகாயம் குழு விசாரணை, மழையால் மோசமான சாலைகள் என பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அரசுத் தரப்பிலும் தயாராகி வருகின்றனர்.

சட்டப்பேரவையில் இருக்கை களை பராமரிக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடந்துவருகிறது. முதல்வர் பன்னீர் செல்வம் எந்த இருக்கையில் அமர்வார், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை வசதி செய்து தரப்படுமா என்பது போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இதுபற்றி விசாரித்தபோது, கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை வசதி அமைத்துத்தர வாய்ப்பில்லை என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுக கூட்டம்

இதற்கிடையே, திமுக எம்எல் ஏக்கள் கூட்டம், கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று மாலை நடக்கிறது. பேரவையில் என்னென்ன பிரச்சினைகளை எழுப்புவது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் குறித்து இன்னும் அறிவிக்கப்பட வில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x