

மகளிருக்கும் ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டுமென இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளது: இந்தியாவில் மகளிருக்கான கிரிக்கெட்டை மேம்படுத்த அவர்களுக்கென்று தனியாக ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டும். ஏராளமான இளம் பெண்கள் ஆர்வத்துடன் கிரிக்கெட்விளையாட வருவார்கள். இதன் மூலம் திறமையான வீராங்கனைகளை உருவாக்க முடியும்.
இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மகளிர் கிரிக்கெட் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. எனவே மகளிருக்கான ஐபிஎல் அறிமுகப்படுத்தப்பட்டால் நிச்சயமாக பிரபலமடையும், அதற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
ஆண் கிரிக்கெட் வீரர்களை முன்மாதிரியாகக் கொண்டு பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிய அஞ்சும் சோப்ரா, தான் சச்சினின் ரசிகை என்றும், கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்த இடங்களில் இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் அவர் மிகப்பெரிய சாதனையாளர் என்றார்.