Published : 29 Dec 2014 04:33 PM
Last Updated : 29 Dec 2014 04:33 PM

நீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. வீரர்களிடம் கோலி

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சனுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னை வெறுப்பது தனக்குப் பிடித்திருக்கிறது என்கிறார்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில் விராட் கோலி ஒரு ஷாட்டை அடித்து கிரீஸைத் தாண்டி வந்தார். பந்தை பிடித்த பவுலர் ஜான்சன் ரன் அவுட் செய்வதற்காக பந்தை கோலி முனைக்கு எறிந்தார். ஆனால் பந்து கோலியைத் தாக்கியது. இதனையடுத்து ஜான்சனுக்கும் கோலிக்கும் வாக்குவாதம் முற்றியது. “நீங்கள் ரன் அவுட் செய்யவில்லை, என்னைத் தாக்கவே பந்தை விட்டெறிந்தீர்கள்” என்று விராட் கோலி ஜான்சனிடம் கூறியதாக தெரிவித்தார்.

இது குறித்து கோலி கூறும் போது, “வாக்குவாதம் அப்போது தொடங்கவில்லை, நான் களமிறங்கியது முதல் என்னை ‘வீணாய்ப்போன பிள்ளை’ என்று அழைத்து வந்தனர். ஆனால், நான் கூறுகிறேன், நான் அப்படித்தான்...உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை அது தான் நான் விரும்புவது. களத்தில் சில வார்த்தைகளைப் பயன்படுத்துவது பற்றி எனக்கு கவலையில்லை, அது எனக்கு சாதகமாக இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவது எனக்குப் பிடித்திருப்பதற்கு காரணம் என்னவெனில், அவர்களால் அமைதியாக இருக்க முடியாது. களத்தில் வாக்குவாதம் செய்வது பற்றி நான் கவலைப்படவில்லை. அது எனக்கு உற்சாகத்தை அளித்தது, அது என்னில் உள்ள சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணருகிறது. எனவே, அவர்கள்தான் பாடம் கற்கவில்லை என்று நினைக்கிறேன்.

அந்த அணியினர் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளனர். ஆனால் இதுவே 1-1 என்று இருந்திருந்தால் அவர்களின் வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க சுவாரசியமாக உள்ளது.” என்று கூறியுள்ளார் கோலி.

ஆனால், ஜான்சனுடன் அந்த வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் 2 கேட்ச்களை கொடுத்தார். கோலியின் கவனம் சிதறியது என்றே தெரிந்தது. உண்மையில் ஜான்சன் பந்தை விட்டெறிந்து இவர் மீது பட்டவுடன் உடனடியாக மன்னிப்பு கேட்டார். வாக்குவாதத்திற்குப் பிறகு கோலி தனது கவனத்தை மீண்டும் கொண்டுவர சற்றே சிரமப்பட்டார் என்றே தெரிந்தது.

அதுமட்டுமல்ல, எதிர்முனையில் கோலியை விடவும் ஆக்ரோஷமாக ஆடிய ரஹானேயின் கவனத்தையும் கோலியின் வாக்குவாதம் சிதறடித்தது உடனடியாகவே தெரிந்தது.

'ஓ! என் நண்பர்களே நண்பர் என்பவர் இல்லை' என்று பண்டைய கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில் முரண்நகையுடன் குறிப்பிட்டதை பகடி செய்யும் விதமாக 19-ஆம் நூற்றாண்டு கலகச் சிந்தனையாளரும் தத்துவ மேதையுமான பிரெடெரிக் நீட்ஷே, “ஓ! பகைவர்களே, பகைவர் இல்லை” என்றார்.

இந்த இரண்டு மகாவாக்கியங்களும் தங்களுக்குள்ளேயும் இடையேயும் ஒன்றுக்கு ஒன்று முரணான செய்தியை தன்னகத்தே ஒரே மூச்சில் கொண்டுள்ளது.

இரண்டு கூற்றுக்களும் சொல்ல முடியாததைச் சொல்ல முயற்சி செய்கிறது. அரிஸ்டாடில் நட்புக்கு ஆதரவாக பேசுகிறாரா? நீட்ஷே நட்புக்காகப் பேசுகிறாரா என்பதெல்லாம் முடிவு காண முடியா நீண்ட நெடும் விவாதங்கள்.

இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு வாக்கியத்தை நாம் உருவாக்கினால், “உலகில் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை’ என்று நடுநிலைவாத முடிவை எடுக்கலாம்.

ஆஸ்திரேலிய இங்கிலாந்து வீரர்களின் நடத்தை அரிஸ்டாடிலின் வாக்கியத்தையும், கோலியின் நடத்தையும் கூற்றும் நீட்ஷே வாக்கியத்தை ஒத்திருப்பது போல் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x