

பிரிஸ்பன் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் முரளி விஜய் சதம் எடுத்ததை அவருடன் ஆடிய ரஹானேதான் அவரிடம் கூறியதாக முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 99 ரன்களில் ஆட்டமிழக்க காரணம் தான் தனது சதத்தில் மிகுந்த கவனம் கொண்டு அதனால் பதட்டமடைந்து ஆட்டமிழந்ததாகவும் இம்முறை ஸ்கோர் போர்டையே பார்க்கக் கூடாது என்று திட்டவட்டமாக இருந்ததாகவும் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முரளி விஜய் கூறியதாவது:
நான் எந்த ரன் எண்ணிக்கையில் ஆடிக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு தெரியாது. நான் அணியின் ஸ்கோர் மற்றும் எனது பேட்டிங்கில் மட்டும் குறியாக இருந்தேன். அஜிங்கிய ரஹானே எதிர்முனையில் இருந்தார். அவர்தான் நான் சதம் எடுத்துவிட்டேன் என்று கூறினார். அப்போதுதான் எனக்குப் புரிந்தது. இது ஒருவிதத்தில் நல்லது. நான் எனது ஸ்கோரைப் பார்க்க விரும்பவில்லை ஏனெனில் கடந்த போட்டியில் அதில் கவனம் செலுத்திதான் 99 ரன்னில் ஆட்டமிழந்தேன்.
கடந்த போட்டியில் சதம் எடுக்காமல் ஆட்டமிழந்த பிறகே இந்தப் போட்டியில் நான் அதில் கவனம் செலுத்தாமல் சதம் எடுத்தது ஒரு பேருணர்வைத் தருகிறது. கடந்த முறை நான் 99 ரன் என்று அறிந்திருந்தேன் ஆனால் சதம் எடுக்கவில்லை, இந்த முறை என் ஸ்கோர் என்னவென்றே தெரியாது ஆனால் சதம் கிடைத்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் எடுப்பதென்பது நமது நம்பிக்கை மட்டத்தை அதிகரிக்கும். மேலும் இன்றைய வெப்பநிலை அவர்களை விட நமக்கு சாதகமாக அமைந்தது.
அவர்களுக்கு மன ரீதியாக இந்த வெயில் பெரும் சவாலாக அமைந்தது. பவுலர்கள் அசதியடைந்ததை நான் பார்த்தேன். அதனால்தான் நான் பொறுமையாக காத்திருந்தேன்.” என்றார் முரளி விஜய்.