Published : 04 Dec 2014 08:29 AM
Last Updated : 04 Dec 2014 08:29 AM

தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை 3 நாள் மட்டும் நடத்த முடிவு: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. தொடரை 3 நாட்கள் மட்டும் நடத்த அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் நிலவும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி கூடும் என ஆளுநர் ரோசய்யா அறிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குவதையொட்டி, பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம், நேற்று காலை 11 மணி தொடங்கி அரை மணி நேரம் நடந்தது. இதில், கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது, என்னென்ன அலுவல்களை எடுத்துக் கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், கூட்டத்தொடர் 3 நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது. முதல்நிகழ்ச்சியாக மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், பெ.கந்தசாமி, நா.மகாலிங்கம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், மு.ரங்கநாதன், ஏ.அ.சுப்பராஜா ஆகிய 6 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத் தொடர்ந்து 2014-15ம் ஆண்டு கூடுதல் செலவுக்கான 2-வது துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். நாளை (5-ம் தேதி) பல்வேறு அரசினர் அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்படும். 6, 7-ம் தேதிகள் பேரவைக்கு விடுமுறை.

8-ம் தேதி திங்கள்கிழமை, துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், பதிலுரையும் மற்றும் அதில் கண்டுள்ள மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பும் நடக்கிறது. பின்னர், துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்தல், ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல், அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் ஆகிய அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

கூட்டத் தொடரை குறைந்த நாட்கள் நடத்துவதற்கு அலுவல் ஆய்வுக்குழுவில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறைந்தபட்சம் 10 நாட்களாவது பேரவையை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

காவிரியில் கர்நாடகம் புதிய அணை கட்டும் விவகாரம், தருமபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், போக்குவரத்து ஊழியர் களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x