Published : 10 Dec 2014 05:14 PM
Last Updated : 10 Dec 2014 05:14 PM

40 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி காஷ்மீர் அணி படைத்தது வரலாறு

மும்பையில் நடைபெற்ற ஏ பிரிவு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 ஆண்டுகள் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி ஜம்மு-காஷ்மீர் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது.

மும்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்த தோல்வி அதிர்ச்சியாக பார்க்கப்பட்டாலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்த்தில் இந்த வெற்றி பெரிதாகப் பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டு வெள்ளத்தில் அங்குள்ள மைதானம் பயிற்சி செய்ய முடியாத நிலைக்குச் சென்றிருந்தாலும் போதிய வசதியின்மையுடன் கூடவே ஜம்மு அணி வலுவான மும்பையை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் மும்பை 236 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஜம்மு-காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 254 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்ஸில் சூர்யகுமார் யாதவ்வின் அதிரடி 115 ரன்கள் மூலம் மும்பை 254 ரன்களை எட்டியது. வெற்றி பெற 237 ரன்கள் தேவை என்ற நிலையில் 58/1 என்று தொடங்கிய ஜம்மு அணி இன்று 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

80 ஆண்டுகால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இரு அணிகளும் மோதின. இதில் பர்வேஸ் ரசூல் தலைமை ஜம்மு அணி மும்பைக்கு அதிர்ச்சி அளித்தது.

மிகவும் நெகிழ்ச்சியான விஷயம் என்னவெனில், ஜம்மு-காஷ்மீர் வெள்ளத்தின் போது இந்த அணியின் முன்னணி வீரர்கள் பலர் உணவு, குடிநீரின்றி பலநாட்கள் தங்கள் வீடுகளில் முடங்கியிருந்தனர்.

குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷுபம் கஜூரியா உணவு, குடிநீரின்றி காஷ்மீர் வீட்டில் பல நாட்கள் முடங்கியிருந்தார். அவர்தான் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 107 ரன்களையும் 2-வது இன்னிங்ஸில் 78 ரன்களையும் எடுத்து வெற்றியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

தங்கள் அணியின் இந்த மகத்தான சாதனை வெற்றி குறித்து ஜம்மு-காஷ்மீர் அணியின் கேப்டன் பர்வேஸ் ரசூல் கூறியிருப்பதாவது: மும்பையை மும்பை மண்ணில் வென்றது மகத்தானதுதான். ஷுபம் கஜூரியா அபாரமாக பேட்டிங் செய்தார். அதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் ராம் தயாள், உமர் நசீர் ஆகியோரும் அபாரமாக வீசினர். பெரிய அணிகளுக்கு நிகராக நாங்கள் விளையாட முடியுமா என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இன்று அதற்கு விடையளித்து விட்டோம். ஒருநாள் போட்டியில் டெல்லி அணியை இதற்கு முன்பு வீழ்த்தியிருந்தோம்.

எங்கள் அணியில் எந்த நட்சத்திர வீரரும் கிடையாது, நான் அணியினரிடம் கூறினேன், எனது அணியில் அனைவரும் சமம் என்று.

ஆனால் அணியின் பயிற்சியாளரான முன்னாள் இந்திய இடது கை ஸ்பின்னர் சுனில் ஜோஷி கூறியதே முக்கியத்துவம் வாய்ந்தது:

”இந்த வெற்றி காஷ்மீர் பகுதியில் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இது முக்கியமான வாய்ப்பு நிரூபியுங்கள் என்று அணியிடத்தில் கூறினேன். நான் மும்பை அணியை 20 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன், இப்போதுதான் முதல்முறையாக அதன் பேட்டிங்கில் பலவீனமான அணியாக அதனைப் பார்க்கிறேன்.

குறிப்பாக வேகப்பந்து வீச்சிற்கு எதிராக அந்த அணி திணறியது. இந்த போட்டியில் மும்பை வீரர்கள் ஆடிய ஷாட்களைப் போல் நான் அந்த அணியினடத்தில் இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. தற்காப்பான ஆட்டத்திலும் அவர்கள் பலவீனமாகத் திகழ்ந்தனர். நல்ல பேட்டிங் விக்கெட்டில் ஜம்மு வேகப்ப்ந்து வீச்சாளர்கள் ராம் தயாள் மற்றும் உமர் நசீர் அபாரமாக வீசினர்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x