

2015 ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி-சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடிகளுக்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டுள்ளது.
மகேஷ் பூபதியும், 27 வயதான சாகேத் மைனேனியும் முதல்முறையாக சென்னை ஓபனில் ஜோடி சேர்ந்து விளையாடவுள்ளனர். கடந்த மார்ச்சில் நடைபெற்ற ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் விளையாடிய மகேஷ் பூபதி, அதன்பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடாத நிலையில் சென்னை ஓபன் மூலம் மீண்டும் டென்னிஸுக்கு திரும்பியுள்ளார். இரட்டையர் பிரிவில் 52 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள மகேஷ் பூபதி, சென்னை ஓபனில் கடைசியாக 2011-ல் லியாண்டர் பயஸுடன் இணைந்து பட்டம் வென்றுள்ளார்.
சர்வதேச தரவரிசையில் 154-வது இடத்தில் இருக்கும் சாகேத் மைனேனி, சீன தைபேவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை ஆசிய-ஓசியானியா குரூப் 1 சுற்றில் முதல்முறையாக விளையாடினார். அதில் அவர், ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடினார். இதுதவிர இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியாவுடன் இணைந்து தங்கப் பதக்கமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் சனம் சிங்குடன் இணைந்து வெள்ளிப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழக வீரர்களான ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி மூன்றாவது முறையாக சென்னை ஓபனில் களமிறங்கவுள்ளது. இரட்டையர் தரவரிசையில் அதிகபட்சமாக 211-வது இடம் வரை முன்னேறியவரான பாலாஜி, சென்னை ஓபனில் கடந்த 2012-ம் ஆண்டு ஜீவனுடன் இணைந்து முதல்முறையாக களமிறங்கினார். அப்போது இந்த ஜோடி, போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஸ்காட் லிப்ஸ்கி-ராஜீவ் ராம் ஜோடிக்கு கடும் சவால் அளித்தது குறிப்பிடத்தக்கது.
20-வது ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஜனவரி 5 முதல் 11 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.