

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அப்ரிதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (பிசிபி).
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் பாகிஸ்தான் தோல்வி கண்டது. இதன்பிறகு நாடு திரும்பிய அப்ரிதி, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற ஆக்ரோஷமான மனநிலையோடு விளையாடவில்லை. அதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை எனக்கு வழங்கினால் அதை ஏற்கத்தயார் என அப்ரிதி கூறினார்.
அதைத் தொடர்ந்தே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகையில், “கேப்டன் மற்றும் அணி அலுவலர்களைத் தவிர வேறுயாரும் ஊடகங்களிடம் பேசக்கூடாது எனக் கூறப்பட்டிருந்த நிலையில் அப்ரிதி எதற்காக பேசினார் என அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள் ளது” என தெரிவித்தன.
அப்ரிதி கூறுகையில், “நான் கேப்டன் பதவியின் பின்னால் ஒருபோதும் ஓடியதில்லை.ஊடகங்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தேன். பெரிய போட்டிகள் முடிந்து வரும் போதெல்லாம் நான் ஊடகங்களிடம் பேசியிருக்கிறேன். அதனால் இந்தமுறை ஊடகங்களிடம் பேசியதில் தவறு எதும் இல்லை” என்றார்.