

பவுன்சர் தாக்கி மரமணடைந்த பிலிப் ஹியூஸுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி கடுமையாகப் போராடும். அதனால் இந்திய அணி கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 9-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இது தொடர்பாக வாசிம் அக்ரம் கூறியதாவது: ஆஸ்திரேலிய வீரர்கள் உண்மையிலேயே கடினமாக ஆடுவார்கள். இந்திய அணி அதற்குத் தயாராக இருக்கவேண்டும். பிலிப் ஹியூஸுக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் தொடரை வெல்ல நினைப்பார்கள். ஆஸ்திரேலியா வலுவான அணி. அதனால் இந்திய வீரர்கள் பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.
பிலிப் ஹியூஸ் மரணத்தால் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பவுலர்கள் பவுன்சர் வீசுவதை நிறுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இவ்வளவு நடந்தபிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் மீண்டும் ஆடுகளத்துக்குத் திரும்புவது கடினம்தான். சில நாட்கள் ஆன பிறகு மைதானத்துக்குச் சென்று மீண்டும் பயிற்சியில் ஈடுபடும்போது இயல்பாகிவிடுவார்கள். பொதுவாக பவுன்சர் வீசுகிற ஒரு பவுலரின் நோக்கம் பேட்ஸ்மேனை அச்சுறுத்துவதுதான். பவுன்சரின் நோக்கம், விக்கெட் எடுப்பதற்காக மட்டுமல்ல. ஆனால் அதன் வழியாக விக்கெட் விழுந்தால் நல்லதுதான். பேட்ஸ்மேனுக்குப் பயத்தை ஏற்படுத்தி பேக்புட்டில் நின்று ஆடவைப்பதற்காகவே பவுன்சர் வீசப்படுகிறது. காயப்படுத்துவதற்காக அல்ல.” என்றார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பவுன்சர் பந்துகளால் அதிகம் பாதிப்படைவதற்கு காரணம், இந்த இரு நாடுகளிலும் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காரணமா என்று கேட்டபோது, “இந்தியாவைப் பற்றி தெரியவில்லை. ஆனால், உலகம் முழுக்க கிரிக்கெட் உபகரணங்களின் தரம் முன்னேறியுள்ளது. உபகரணங்களின் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்ஆகிய இரு தரப்பினரும் உபகரணங்கள் தொடர்பாக பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் உள்ளன. உள்ளூர் போட்டிகளில் அந்த வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்று தெரியாது. ஆனால் பெரும்பாலும் கிரிக்கெட் உபகரணங்களின் தரம் இப்போது கூடியுள்ளது” என்றார்.
பிலிப் ஹியூஸ் மரணம் பற்றி பேசிய அக்ரம, “பவுன்சர் வீசிய சீன் அபாட்டை நினைத்துப் பாருங்கள். நான் அவரிடம், நடந்த சம்பவத்தை சுலபமாக எடுத்துக்கொள்ள சொல்வேன். இது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அபாட்டின் மீது தவறு இல்லை. அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் நிச்சயம் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவார்.” என்றார்.