சரிதா தேவிக்கு ஓர் ஆண்டு தடை

சரிதா தேவிக்கு ஓர் ஆண்டு தடை
Updated on
2 min read

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடுவரின் ஒரு தலைபட்சமான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஓர் ஆண்டு தடையும், ரூ.66 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏஐபிஏ)

எனினும் இந்த ஓர் ஆண்டு தடையால் அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. தடைக்காலம் 2014 அக்டோபர் 1-ம் தேதி (பதக்கத்தை வாங்க மறுத்த தினம்) முதல் 2015 அக்டோபர் 1-ம் தேதி வரையாகும். இதன்பிறகுதான் 2016 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று நடைபெறவுள்ளது. அதனால் அவருடைய ஒலிம்பிக் கனவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.

சரிதா நன்றி

இது தொடர்பாக சரிதா தேவி கூறுகையில், “வாழ்நாள் தடையிலிருந்து தப்பியதால் நிம்மதியடைந்துள்ளேன். இக்கட்டான நேரத்தில் எனக்கு உதவிய பாக்ஸிங் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தடைக்காலம் வரும் அக்டோபர் மாதத்தோடு முடிந்துவிடுவதால் நான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும். கடுமையாக உழைத்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்” என்றார்.

இது தொடர்பாக பாக்ஸிங் இந்தியா தலைவர் சந்தீப் ஜஜோடியா கூறுகையில், “சரிதாவுக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்படலாம் என அச்சத்தில் இருந்தோம். ஆனால் இப்போது குறைவான தண்டனை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் பெரும் நிம்மதியடைந்துள்ளோம். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் (ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று) போட்டியில் சரிதா பங்கேற்கலாம்” என்றார்.

பயிற்சியாளருக்கு தடை

குர்பாக்ஸ் சிங் சாந்து உள்ளிட்ட 3 இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளர்களை எவ்வித தண்டனையுமின்றி விடுவித்த ஏஐபிஏ, இந்திய அணியின் வெளிநாட்டு பயிற்சியாளரான கியூபாவின் பிளாஸ் பெர்னாண்டஸுக்கு 2 ஆண்டுகள் தடையும், ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. அவருடைய தடைக்காலமும் அக்டோபர் 1, 2014-லிருந்து கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர சரிதாவின் தனி பயிற்சியாளர் லெனின் மெய்தேய்க்கு ஓர் ஆண்டும், கணவர் தோய்பா சிங்கிற்கு 2 ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய விளையாட்டுக் குழு தலைவர் சுமேரிவாலாவின் நிலை குறித்து ஏஐபிஏ எதையும் தெரிவிக்கவில்லை. அவரையும் ஆரம்பத்தில் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது ஏஐபிஏ.

இது தொடர்பாக ஜஜோடியா கூறுகையில், “பெர்னாண்டஸ் மீதான தடையை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தாலும், அதை ஏஐபிஏ பரிசீலிக்கும் என நினைக்கவில்லை. ஏனெனில் அவர் மூத்த பயிற்சியாளர். அவருக்கு அனைத்து விதிமுறைகளும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் என சரிதா சொல்லலாம். ஆனால் பெர்னாண்டஸ், சரிதாவை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அது அவருடைய கடமை. சரிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை கட்டுவதற்கு பாக்ஸிங் இந்தியா உதவும்” என்றார்.

விளையாட்டு அமைச்சகம் கடிதம்

சரிதா தேவிக்கு விதிக்கப்பட்டுள்ள ஓர் ஆண்டு தடையை மறு பரிசீலனை செய்யுமாறு ஏஐபிஏவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in