

அடிலெய்ட் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விளையாடுகிறார். மரணமடைந்த பிலிப் ஹியூஸ் பெயர் 13-வது வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளது.
பிலிப் ஹியூஸிற்கு கவுரவம் செய்யும் விதமாக அவரது பெயர் 13-வது வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி, வழக்கம் போல் அனுபவமிக்க பீட்டர் சிடில், ரியான் ஹேரிஸ், மிட்செல் ஜான்சன் ஆகியோருடன் களமிறங்குகிறது. நேதன் லயன் ஸ்பின்னராக சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
ஊடகங்களைச் சந்திப்பதிலிருந்து கிளார்க்கிற்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் போட்டிக்கு முதல் நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் மிட்செல் ஜான்சன் அணியை அறிவித்தார்.
கிளார்க் விளையாடுவதால் ஷான் மார்ஷ் உள்நாட்டு கிரிக்கெட்டிற்குத் திரும்பியுள்ளார்.
“இந்தக் கடினமான தொடருக்கு கிளார்க் கேப்டனாக செயலாற்றுவது அவசியம். அவர் உடற்தகுதி பெற்றிருப்பது எங்களுக்கு பெரிய ஊக்கமளித்துள்ளது. அவர் ஒரு பலமான கேப்டன்.
நாங்கள் எப்படி விளையாடி வருகிறோமோ அதுபோலவே விளையாடுவது அவசியம். அதாவது ஆக்ரோஷமான அணுகுமுறை அவசியம். நாங்கள் அப்படித்தான் விளையாடி வருகிறோம். சூழ்நிலைகள் எதனை வலியுறுத்துகிறதோ அதனைச் செய்வோம், அது பவுன்சர் வீசுவதாக இருந்தாலும் சரி. அணுகுமுறையில் மாற்றம் இருக்காது” என்றார் மிட்செல் ஜான்சன்.
ஆஸ்திரேலிய அணி வருமாறு:
டேவிட் வார்னர், கிறிஸ் ராஜர்ஸ், ஷேன் வாட்சன், மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ், பிராட் ஹேடின், மிட்செல் ஜான்சன், ரியான் ஹேரிஸ், பீட்டர் சிடில், நேதன் லயன், ஜோஸ் ஹேசில் உட் (12-வது வீரர்), பிலிப் ஹியூஸ் (13வது வீரர்).