Published : 06 Dec 2014 12:04 PM
Last Updated : 06 Dec 2014 12:04 PM

ஐஎஸ்எல் அரையிறுதியில் கோவா: சென்னை அணியை பந்தாடியது

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவா எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் அந்த அணி 21 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

சென்னை அணி சொந்த மண்ணில் முதல்முறையாக தோற்றுள்ளது. ஏற்கெனவே அரையிறுதியை உறுதிசெய்துவிட்ட சென்னை அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்திருக்கும். எனினும் சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.

பெர்னாட் மென்டி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்திலேயே தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது. 2-வது நிமிடத்தில் சென்னையின் பின்கள வீரர் சுவாரஸும் , மிட்பீல்டர் கொன்ஸாலெஸும் இணைந்து 18 யார்ட் பாக்ஸ் அருகே பந்தைக் கடத்த, அதை வாங்கிய புருனோ பெலிஸாரி இடது காலால் கோல் கம்பத்தை நோக்கியடித்தார். ஆனால் அதை கோவா கோல் கீப்பர் ஜேன் ஸீடா தகர்த்ததால் ஆரம்பத்திலேயே கோல் வாங்குவதில் இருந்து தப்பியது கோவா.

14-வது நிமிடத்தில் கோவா வீரர் ஆன்ட்ரே சான்டோஸை மென்டி தள்ள, அவருக்கு யெல்லோ கார்டு கொடுத்தார் நடுவர். இதையடுத்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கொன்ஸாலெஸும் யெல்லோ கார்டால் எச்சரிக்கப்பட்டார். இதன்பிறகு இரு அணிகளும் ஆக்ரோஷம் காட்ட, 18-வது நிமிடத்தில் கோவா வீரர் ஹாரூன் யெல்லா கார்டு வாங்கினார்.

23-வது நிமிடத்தில் கோல் கம்பத்தின் இடதுபுறத்தில் இருந்து ஹாரூன் அடித்த பந்தை சென்னை கோல் கீப்பர் ஷில்டான் பால் தடுக்க முயன்றார். ஆனால் அவர் கையில் பட்ட பந்து பின்னர் கோல் கம்பத்தின் மேல் பகுதியில் பட்டு வெளியேறியது. அப்போது வலதுபுறத்தில் இருந்து முன்னோக்கி வந்த கோவா மிட்பீல்டர் ரோமியோ கோலடித்தார்.

தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா 41-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. மிரோஸ்லாவ் ஸ்லெபிகா உதவியுடன் இந்த கோலை அடித்தார் ஆன்ட்ரோ சான்டோஸ். முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் சென்னை அணியின் கோல்வாய்ப்பை கோல் கம்பத்தின் நுனியில் நின்று தகர்த்தார் கோவா முன்கள வீரர் புருனோ பெலிப்.

இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் சென்னை அணியில் ஜேயேஸ் ரானேவுக்குப் பதிலாக பல்வந்த் சிங் களம்புகுந்தார். தொடர்ந்து 50-வது நிமிடத்தில் ஜெம்பா ஜெம்பாவுக்கு காயம் ஏற்பட்டதால் போயன் களமிறங்

கினார். 62-வது நிமிடத்தில் கோவா வீரர் நாராயண் தாஸிடம் பந்து செல்ல, அவர் கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். அப்போது சென்னை கோல் கீப்பர் அதைத் தடுக்க, அவருடைய கையில் இருந்து நழுவிய பந்து கோவா வீரர் மிரோஸ்லாவிடம் சென்றது. அதை சரியாகப் பயன்படுத்திய அவர் கோவாவின் 3-வது கோலை அடித்தார்.

இதன்பிறகு பல கோல் வாய்ப்புகளை வீணடித்த சென்னை அணி கடைசி நிமிடத்தில் ஒரு கோலடித்து ஆறுதல் தேடிக்கொண்டது. இந்த கோலை மவுரிஸ் அடித்தார். சென்னை பின்கள வீரர்களின் ஆட்டம் படுமோசமாக அமைந்தது. மொத்தத்தில் சென்னை ரசிகர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x