

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பைனல் பாட்மிண்டன் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது.
துபாயில் முதல்முறையாக நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவாலுக்கும், ஸ்ரீகாந்துக்கும் கடும் சவால் காத்திருக்கிறது. மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் சாய்னா, சீனாவின் ஷிக்ஸியான் வாங், கொரியாவின் ஜி ஹியூன், இயோன் ஜு பே ஆகியோர் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஷிக்ஸியானும், சாய்னாவும் 10 முறை மோதி தலா 5 முறை வெற்றி கண்டுள்ளனர்.
ஆனால் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் ஷிக்ஸியான் வாங் வென்றுள்ளார். ஹியூனுக்கு எதிராக சாய்னா 4 வெற்றியை பதிவு செய்துள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே மோதியுள்ளனர். அதில் சாய்னா தோல்வி கண்டுள்ளார். பேவுக்கு எதிராக 6 வெற்றியையும், 4 தோல்வியையும் பதிவு செய்துள்ளார் சாய்னா.
ஆடவர் பிரிவைப் பொறுத்தவரையில் ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்கென்ஸன், ஜப்பானின் கென்டோ மொமோட்டோ, இந்தோனேசியாவின் டாமி சுகியார்ட்டோ ஆகியோர் பி பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஜோர்கென்ஸன், மொமோட்டோ ஆகியோரை ஸ்ரீகாந்த் தோற்கடித்துள்ளார்.
அதேநேரத்தில் சுகியார்ட்டோவுடன் ஒருமுறை மட்டுமே மோதியுள்ள காந்த் அதில் தோல்வி கண்டுள்ளார். ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் தலா 8 பேர் பங்கேற்கின்றனர். அவர்கள் ஏ, பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.