Published : 30 Apr 2014 10:00 AM
Last Updated : 30 Apr 2014 10:00 AM

மேக்ஸ்வெல் கேட்ச்: மிட்செல் திருப்தி

மேக்ஸ்வெல்லை கேட்ச் செய்து ஆட்டமிழக்கச் செய்தது திருப்தியளிக்கிறது என பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்தார்.

துபாயில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியைத் தோற்கடித்தது. அதில் பஞ்சாப் வீரர்கள் கிளன் மேக்ஸ்வெல், விருத்திமான் சாஹா ஆகியோரை அற்புதமாக கேட்ச் செய்தார் மிட்செல். ஆனாலும் பெங்களூர் அணியால் தோல்வியில் இருந்து தப்ப முடியவில்லை.

போட்டிக்குப் பிறகு அது குறித்துப் பேசிய மிட்செல் ஸ்டார்க், “மேக்ஸ்வெல்லை கேட்ச்செய்து ஆட்டமிழக்கச் செய்தது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. ஏனெனில் அவர் அதிரடியாக விளையாடி ரன் குவித்து வருகிறார். அப்படிப்பட்ட அவரை கேட்ச் செய்து விரைவாக வெளியேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கேட்ச்சால் போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக வரவிட்டாலும், இரு நல்ல கேட்சுகளை பிடித்ததில் மகிழ்ச்சியே.

இரண்டு கேட்சுகளில் மேக்ஸ்வெல் கேட்ச்சை எளிதாகப் பிடித்துவிட்டாலும், சாஹா கேட்சை பிடிக்கும்போது பவுண்டரி எல்லையை சரியாகக் கணிக்க முடியவில்லை. எனினும் எல்லைக்கு மிக அருகில் நின்று கேட்ச் பிடித்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரையில் சாஹாவை பிடித்த கேட்ச்சைவிட, நமக்கு முன்னால் தாழ்வாக வரும் கேட்ச்சை பிடிப்பதே எளிது” என்றார்.

கோலியும், டிவில்லியர்ஸும் தனக்குப் பிடித்த சிறந்த பீல்டர்கள் எனக்கூறிய ஸ்டார்க், “எங்கள் அணியில் தலைசிறந்த பீல்டர்கள் சிலர் உள்ளனர். “அவுட் பீல்டில்” டிவில்லியர்ஸ் அற்புதமாக செயல்படுகிறார். எனவே எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரைத் தாண்டி பந்தை அடிப்பது கடினம். இதேபோல் விராட் கோலி உலகின் தலைசிறந்த பீல்டர்களில் ஒருவர். இந்திய பீல்டர்களில் எனக்கு பிடித்தவர் விராட் கோலிதான்” என்றார்.

டிவில்லியர்ஸ் கேட்ச்சை எல்லையில் அற்புதமாக கேட்ச் செய்த கிறிஸ் லின் பீல்டிங் குறித்து கேட்டபோது, “அவர் தனது காலை கீழே வைக்காமல் கேட்ச்சை பிடித்திருந்தால் அது எப்போதுமே தலைசிறந்த கேட்ச்சாக இருந்திருக்கும். ஆனாலும் இப்போது அவர் பிடித்திருக்கும் கேட்ச் மிகச்சிறப்பானதுதான். ஏனெனில் மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் அவர் கேட்ச் பிடித்தார். அதுதான் கொல்கத்தாவின் வெற்றிக்கு காரணமானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x