

உலகின் மிகப்பெரிய செஸ் இணைய தளமான செஸ்.காம் நடத்தும் போட்டியில் உலக செஸ் சாம்பியன் கார்ல்சனுடன் விளையாடும் வாய்ப்பினை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ராஜரிஷி கார்த்தி பெற்றுள்ளார்.
'ப்ளே செஸ்.காம், கார்ல்சனின் நிறுவனமான ப்ளே கார்ல்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க செஸ் வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக, செஸ்.காம்-மில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற 10 நபர்களுக்கு கார்ல்சனுடன் மோதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் தேர்வான ராஜரிஷி, இன்று செஸ்.காம் இணையதளத்தில் நடைபெறுகிற போட்டியில் கார்ல்சனுடன் மோதுகிறார். ராஜரிஷி, இந்தப் போட்டியில் பங்கேற்கும் ஒரே இந்தியச் சிறுவன். அவருடைய பிடே ரேட்டிங், 1960 ஆகும். இந்நிகழ்வில் கார்ல்சன்,
மேக்னஸ்' என்கிற தனது செஸ் விளையாட்டுச் செயலியையும் அறிமுகப்படுத்தவுள்ளார்.
இப்போட்டி குறித்து ராஜரிஷி கார்த்தி கூறுகையில், “முடிந்தவரை அவரை வெல்ல முயற்சிப்பேன். இல்லை யென்றால் அவருக்கு நெருக்கடியை யேனும் கொடுப்பேன்” என்றார்.