

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மெல்போர்னில் நடைபெற்றுவந்த 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. வெற்றி இலக்கான 384 ரன்களை விரட்ட 70 ஓவர்கள் மட்டுமே இருக்க, டிராவை மட்டுமே எதிர்நோக்கி ஆடிய இந்தியா, ஆட்டநேர முடிவில் 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது.
துவக்க வீரராக விஜய்யோடு களமிறங்கிய தவான், இரண்டாவது ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்து அதிர்ச்சயளித்தார். தொடர்ந்து களமிறங்கிய புதிய வீரர் ராகுல், அடுத்த ஓவரில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். முரளி விஜய் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை துரித கதியில் இந்தியா பறிகொடுத்தது.
அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே கோலி இணை, முதல் இன்னிங்ஸைப் போலவே, அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் பொறுமையாக ஆடி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சோதித்தனர். கோலி 87 பந்துகளில் அரை சதம் தொட்டார். ஆனால் தேநீர் இடைவேளைக்கு அடுத்த ஓவரிலியே கோலி 54 ரன்களுக்கு வீழ்ந்தார்.
ரஹானேவுடன் புஜாரா சிறிது நிலைத்து ஆடினாலும் ஜான்சனின் வேகத்தில் 21 ரன்களுக்கு ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்த சில ஓவர்களில் 48 ரன்களுக்கு ரஹானே ஆட்டமிழக்க, அஸ்வின் தோனியுடன் களத்தில் இணைந்தார்.
நாள் முடிய 15 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில், விக்கெட்டுகளைக் காப்பாற்றி இந்தியா ஆட்டத்தை டிரா செய்யுமா என்று சந்தேகம் நிலவியது. ஆனால் அஸ்வின், தோனி இருவரும் நிலைத்து ஆடி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சின் யுக்தி பெரிய அளவில் சோபிக்காததால், நாள் முடிய 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே ஸ்மித் ஆட்டத்தை முடித்துக் கொள்ள முன்வந்தார்.
இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. அஸ்வின் 34 பந்துகளில் 8 ரன்களுடனும், தோனி 39 பந்துகளில் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் அடித்து இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரயன் ஹாரிஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியாவால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் டிரா செய்தது பலரை நிம்மதியடையச் செய்திருக்கும்.
முன்னதாக நேற்று 261 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிவந்த ஆஸ்திரேலியா, இன்று 318 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஆஸி. வீரர் மார்ஷ் துரதிர்ஷ்டவசமாக 99 ரன்களில் ரன் அவுட் ஆகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 6-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.