Published : 09 Dec 2014 10:14 AM
Last Updated : 09 Dec 2014 10:14 AM

முதல் டெஸ்ட்: வார்னரின் உணர்வுபூர்வ சதத்துடன் ஆஸி. வலுவான துவக்கம்

டேவிட் வார்னரின் உணர்வுபூர்வமான சதத்துடன், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி வலுவான துவக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இன்று காலை தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர் ரோஜர்ஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் தவணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதேவேளையில், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் உத்வேகத்துடன் பேட் செய்து சதமடித்தார். சக வீரர் ஹியூஸை இழந்து ஆஸ்திரேலிய அணி களம் காணும் இந்த முதல் போட்டியில், அவரது சதம் உணர்வுபூர்வமானது என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் வருணிக்கின்றனர்.

வாட்சன் 14 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆரோனின் பந்துவீச்சில் தவணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மைக்கேல் கிளார்க் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதுகு வலி அதிகரித்ததன் காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் ஆனார்.

முதல் நாளின் 50 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 131 ரன்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா, ஆரோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இஷாந்த் மிகச் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். முகம்து சமியும், ஆரோனும் சற்றே ரன்களை மிகுதியாக வழங்கி வருகின்றனர்.

தீவிரம் காட்டும் ஆஸ்திரேலியா

சமீபத்தில் மரணமடைந்த பிலிப் ஹியூஸுக்காக இந்தப் போட்டியில் வெல்வதில் ஆஸ்திரேலியா தீவிரமாக உள்ளது. அதனால் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என்பதால் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்ற எதிர்பார்ப்புக்கிணங்கவே ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் காணப்படுகிறது.

2012-ல் ஆஸ்திரேலிய மண்ணில் படுதோல்வி (0-4) கண்ட இந்தியா, இந்த முறை அதை ஈடுகட்டுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அது அவ்வளவு எளிதல்ல. 2012-ல் சச்சின், திராவிட், சேவாக், லட்சுமண் போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருந்தார்கள். ஆனால் தற்போதைய இந்திய அணி இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது.

கடந்த ஆஸ்திரேலியத் தொடரின்போது கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தாலும், ரஹானேவுக்கும், ரோஹித்துக்கும் ஒரு போட்டியில்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆண்டில் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை விளையாடாத இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஆனால் அந்த தொடர்கள் அனைத்தையும் இழந்தது.

வலது கட்டை விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து கேப்டன் தோனி இன்னும் முழுமையாக குணமடையாததால் விராட் கோலி தலைமையில் களமிறங்கியிருக்கிறது இந்திய அணி.

ஹியூஸுக்கு கவுரவம்

சமீபத்தில் மரணமடைந்த ஹியூஸை கவுரவிக்கும் வகையில் முதல் டெஸ்ட் போட்டியில் அவருடைய எண் 408-ஐ (ஆஸி.யின் 408-வது சர்வதேச கிரிக்கெட் வீரர் ஹியூஸ்) தங்கள் சட்டைகளில் அணிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடுகின்றனர். இதுதவிர மைதானத்திலும் 408 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. ஹியூஸை கவுரவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், தெற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

32-வது டெஸ்ட் கேப்டன் கோலி

இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை வகிப்பதன் மூலம் இந்தியாவின் 32-வது டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. தனது அறிமுக டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்த அதே மைதானத்தில் கேப்டனாக அறிமுகமாகிறார் கோலி.

தற்போது தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 3-0 என்ற கணக்கிலோ அல்லது 4-0 என்ற கணக்கிலோ ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழக்குமானால் தரவரிசையில் 7-வது இடத்துக்கு தள்ளப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x