Published : 27 Dec 2014 09:41 AM
Last Updated : 27 Dec 2014 09:41 AM

ஜனவரி 9-ல் திமுக பொதுக்குழுக் கூட்டம்: ஸ்டாலினுக்காக கட்சியில் புது பதவி உருவாக்கம் - மீண்டும் தலைவர் ஆகிறார் கருணாநிதி

திமுக பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கட்சித் தலைவர் கருணாநிதி 11-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். மு.க.ஸ்டாலினுக்காக புதிய பதவியை ஏற்படுத்த திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

திமுகவின் 41 மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. சென்னை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 9 பிரிவுகளைத் தவிர, 15 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி மேற்கில் சுகவனம், கடலூர் கிழக் கில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் பொன்முடி, திருவண்ணாமலை தெற்கில் எ.வ.வேலு, காஞ்சிபுரம் வடக்கில் தாமோ.அன்பரசன் உள்ளிட்ட சீனியர்கள் மாவட்டச் செயலாளர்கள் ஆகியுள்ளனர்.

இதுதவிர அப்துல் வஹாப் (திருநெல்வேலி மத்தி), வெ.கணேசன் (கடலூர் மேற்கு), கே.எஸ்.மஸ்தான்(விழுப்புரம் வடக்கு), அங்கயற்கண்ணி (விழுப்புரம் தெற்கு), சிவானந்தம் (திருவண்ணாமலை வடக்கு), காந்தி (வேலூர் கிழக்கு), நந்தகுமார் (வேலூர் மத்தி), தேவராஜி (வேலூர் மேற்கு), கும்மிடிப் பூண்டி கி.வேணு (திருவள்ளூர் வடக்கு), நாசர் (திருவள்ளூர் தெற்கு) ஆகியோர் மாவட்டச் செயலாளர்கள் ஆகியுள்ளனர்.

சென்னையில் உள்ள 4 மாவட்டங்களில் பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட டிசம்பர் 28-ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக பொதுக் குழு கூட்டம் ஜனவரி 9-ம் தேதி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளுக்கான தேர்தலும் நடக்கிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி 11-வது முறையாக மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப் படவுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு உயர் பதவி கொடுக்கும் வகையில் கட்சியில் புதிய பொறுப்பை ஏற்படுத்த கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. பொதுச் செயலாளர் பதவியில் அன்பழகன் இருப்பதால், ஸ்டாலினுக்காக செயல் தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது.

ஒருவேளை ஸ்டாலினுக்கு புதிய பதவி வழங்கப்படும் சூழலில், அவர் ஏற்கெனவே வகித்துவரும் இளைஞர் அணிச் செயலாளர் (பொறுப்பு), பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு அவரது ஆதரவாளர்களை நியமிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக உள்ள ஐ.பி.செந்தில்குமார், இ.ஜி.சுகவனம் உள்ளிட்டோர் தற்போது மாவட்டச் செயலாளர்கள் ஆகியுள்ளனர். துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் ஆக வாய்ப்புள்ளது.

கட்சியின் சட்டப் பிரிவில் திருநெல்வேலி ஏ.எல்.சுப்ரமணியன் தவிர, தென் மாவட்டத்தினர் யாரும் இதுவரை பொறுப்புகளில் இருந்ததில்லை. பெரும்பாலும் சென்னையை சேர்ந்தவர்களே சட்டப் பிரிவில் பொறுப்பு வகிக்கின்றனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள மூத்த திமுக வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு பொறுப்புகளைக் கேட்கின்றனர். இதுமட்டுமன்றி, தலைமைக் கழகத்தில் உள்ள 60-க்கும் அதிகமான பொறுப்புகளை பெறும் முயற்சியிலும் நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர் என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x