Published : 10 Dec 2014 03:21 PM
Last Updated : 10 Dec 2014 03:21 PM

எந்த ஒரு தீவிரத்தையும் காட்டாத இந்திய பந்துவீச்சு: 2ஆம் நாள் ஆட்டம் ஒரு பார்வை

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக மொத்தம் 30.4 ஓவர்களையே கொண்டதாக அமைந்தது. இதில் ஆஸ்திரேலியா 163 ரன்களை விளாசியது.

354/6 என்று முதல் நாள் ஆட்ட இறுதியில் வீழ்த்திய 3 விக்கெட்டுகளுடன் தன்னம்பிக்கையுடன் தொடங்க வேண்டிய இந்திய அணி, மந்தமான முறையிலும் தொய்வான உடல்மொழியிலும் தொடங்கியது. 'ஆக்ரோஷமான அணுகுமுறை', 'வெற்றிபெறத்தான் இங்கு வந்திருக்கிறோம்' போன்ற வார்த்தைகளெல்லாம் வெறும் வாய்ப்பந்தல்தானா என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது

மேலும், ஸ்மித்துடன் கிளார்க் களமிறங்குவார் என்பதை இந்திய அணி சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. கிளார்க் களமிறங்குவார் என்பதற்கான திட்டமிடுதல் எதுவும் இல்லாததால் இந்திய அணி திகைத்தது.

கடுமையான முதுகு காயத்தில் அவதிப்பட்ட கிளார்க் பல ஊசிகளைப் போட்டுக் கொண்டு களமிறங்கினார். அவரால் கால்களை நகர்த்த முடியவில்லை. ரன்களை வேகமாக ஓட முடியவில்லை.

அதாவது அரைகுறையான உடற்தகுதியுடன் அவர் களமிறங்கிய போதும், இந்திய அணியின் பவுலர்கள் அதனைப் பயன்படுத்தி அவரை வீழ்த்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவர் தன் இஷ்டத்திற்கு கால்களை நகர்த்தாமலேயே வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை விளாச முடியும் அளவுக்கு பந்து வீச்சில் எந்த வித ஆக்ரோஷமோ, தாக்கமோ இல்லை.

சரியான உடற்தகுதியுடன் இல்லாத மைக்கேல் கிளார்க்கையே இந்தப் பந்து வீச்சினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கிளார்க் சில பந்துகளில் காயத்திற்கு அஞ்சி ஒதுங்கி ஒதுங்கி விளையாடினார். முதல் நாள் நன்றாக வீசிய இசாந்த் சர்மாவுக்கு இன்று என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஷார்ட் மற்றும் வைடாக வீசி சில பவுண்டரிகளை விளாசக் கொடுத்தார். 5 பந்துகளை லெக் திசையில் வைடாக வீசினார் இசாந்த்.

இசாந்த் எவ்வழியோ நாங்களும் அவ்வழி என்று முடிவெடுத்து மொகமது ஷமியும் ஷார்ட் மற்றும் வைடாக வீசினார். இல்லையெனில் லெக் திசையில் வீசினார். அல்லது ஓவர் பிட்சில் வீசினார்.

ஓவருக்கு 8 ரன்கள், 7 ரன்கள் என்று வந்து கொண்டேயிருந்தது. குறிப்பாக ஸ்மித் விளாசினார். ஸ்மித்தை வீழ்த்தவும் எந்த திட்டமிடுதலும் இல்லை, தட்டுத்தடுமாறிய கிளார்க்கை வீழ்த்தவும் பந்து வீச்சில்லை.

வேகப்பந்து வீச்சாளர்களின் இந்தக் கூத்தைக் கண்ட கோலி, 96-வது ஓவரிலேயே கரன் சர்மாவை கொண்டு வர நிர்பந்திக்கப்பட்டார். 98-வது ஓவரில் வருண் ஆரோன் வந்தார். ஸ்மித் அந்த ஓவரின் கடைசி பந்தை ஆடாமல் விட்டார் பந்து துரதிர்ஷ்டவசமாக ஆஃப் ஸ்டம்பை உரசிக் கொண்டு சென்றது.

நடுவில் ஒரு ஓவர்தான் கரன் ஷர்மா. வேகப்பந்து வீச்சாளர் முனையை மாற்ற 4-வது பவுலராக எடுக்கப்பட்ட கரன் சர்மா பயன்படுத்தப்பட்டார். வருண் ஆரோனைத் தொடர்ந்து இசாந்த் சர்மாதான் வீசினார்.

மழை இடைவெளிக்குப் பிறகு ஸ்மித் சதம் எடுத்தார். பிறகு மீண்டும் சம்பந்தமில்லாமல் கரண் சர்மாவை பந்து வீச அழைத்தார். கிளார்க் 2 பவுண்டரிகளை விளாசினார். கிளார்க், ஸ்மித் எளிதாக சிங்கிள் எடுக்க வசதியாக லாங் ஆன் நிறுத்தப்பட்டிருந்தது. மிட் ஆனில் நிறுத்தி சிங்கிளை தடுத்திருக்க வேண்டும்அல்லது ரன்களைக் கட்டுப்படுத்தினால் பேட்ஸ்மென்கள் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். ஆனால் அதற்கெல்லாம் ஒரு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. கேள்வி கேட்பாரில்லாமல் ரன்கள் பல வடிவங்களில் வந்து கொண்டிருந்தது.

98 ரன்களில் கிளார்க்கிற்கு வருண் ஆரோன் சில பவுன்சர்களை வீசினார். ஆனால் விக்கெட்தான் விழவில்லை. ஸ்மித், வருண் ஆரோனின் அனைத்து பவுன்சர்களையும் டி20 கிரிக்கெட்டில் அடிப்பது போல் ஒதுங்கிக் கொண்டு விளாசினார்.

கோட்டைவிடப்பட்ட வாய்ப்புகள்:

ஸ்மித் 131 ரன்களில் இருந்த போது பரிதாபத்திற்குரிய கரன் சர்மா வீசிய பந்தை மேலேறி வந்து விளாச நினைத்து கோட்டை விட்டார். பந்து விக்கெட் கீப்பர் சஹாவிடம் சென்றது 109 ஓவர்கள் கீப்பிங் செய்த அவர் பந்தை சரியாக பிடிக்காமல் ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவவிட்டார். அதைவிட கரன்சர்மாவுக்கு ஒரு முக்கியமான விக்கெட் பறிபோனது. இப்படித்தான் பங்கஜ் சிங்கை ரவீந்திர ஜடேஜா கேட்சை விட்டு உத்வேகத்தைக் கெடுத்தார். அவரது டெஸ்ட் வாழ்வு அல்பாயுசில் முடிந்து போனது.

இது மட்டுமல்ல மீண்டும் கரன் சர்மாவே துரதிர்ஷ்டத்திற்கு ஆளானார். ஸ்மித் 161 ரன்கள் எடுத்திருந்த போது லாங் லெக்கில் இசாந்த் சர்மா கேட்சை கோட்டை விட்டார். இது வேண்டுமானால் கொஞ்சம் கடினமான வாய்ப்பு என்று கூறலாம். ஆனால் எந்த ஒரு வாய்ப்பையும் இந்தியா உருவாக்கத் தயாராக இல்லை. தானாக வந்த வாய்ப்பை பற்றிக் கொள்ளும் நிலையிலும் இல்லை. கடைசியாக கிளார்க் அவுட் ஆனது கூட போனால் போகட்டும் என்பது போலவே தெரிந்தது.

மொத்தத்தில் 2-ஆம் நாள் ஆட்டம், மழையினால் பாதிக்கப்பட்டு சோர்வளித்ததை விட இந்திய அணியின் அணுகுமுறை ஏற்படுத்திய சோர்வே அதிகம். இந்த அணிக்காக அதிக சம்பளத்தில் ஒரு பயிற்சியாளர், ஏகப்பட்ட உதவி பயிற்சியாளர்கள் என்று பிசிசிஐ செலவழித்தும், 2ஆம் நாள் ஆட்டத்திற்கென எந்த ஒரு திட்டமும் இடப்படவில்லை என்பதையே இந்திய அணியின் இன்றைய ஆட்டம் நிரூபித்துள்ளது.

இந்திய ரசிகர்களுக்கு மிகவும் சோர்வூட்டக்கூடியதாக 2ஆம் நாள் ஆட்டம் அமைந்தது. 354/6 என்ற நிலையிலிருந்து 517/7 என்ற வெற்றி நிலைக்குச் சென்றுள்ளது. இந்திய அணியை பேட்ஸ்மென்களும், மழையும்தன் காப்பாற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x