Published : 01 Dec 2014 03:51 PM
Last Updated : 01 Dec 2014 03:51 PM

அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக்: வங்கதேச பந்துவீச்சாளர் உலக சாதனை

வங்கதேச அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது முதல் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் எடுத்து உலகசாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாக்காவில் நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீர்ராகக் களமிறங்கிய தைஜுல் இஸ்லாம் ஹாட்ரிக் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் வீரரானார் தைஜுல் இஸ்லாம். 22 வயதாகும் தைஜுல் இஸ்லாம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 7 ஓவர்கள் வீசி 2 மைடன்களுடன் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஜிம்பாப்வே அணி 30 ஓவர்களில் 128 ரன்களுக்கு சுருண்டது.

ஜிம்பாப்வே அணி 26-வது ஓவர் முடிவில் 120/5 என்ற நிலையில் இருந்தது. அப்போது தைஜுல் இஸ்லாம் 27-வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அவர் சாலமன் மைர் என்பவரை அந்த ஓவரின் முதல் பந்தில் எல்.பி செய்தார்.

அதே ஓவர் கடைசி பந்தில் பன்யாங்கராவை பவுல்டு செய்தார். பிறகு 29-வது ஓவரின் முதல் 2 பந்துகளில் நயம்பு மற்றும் சடாரா ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஹாட்ரிக் எடுக்கும் 4-வது வங்கதேச பவுலர் ஆவார் தைஜுல். இதற்கு முன்பு ஷஹாதது ஹுசைன், அப்துர் ரசாக், மற்றும் ரூபல் ஹுசைன் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

ஜிம்பாவே கடைசி 9 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்தது.

129 ரன்கள் இலக்கை எதிர்த்து வங்கதேசம் தற்போது 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x