Published : 10 Dec 2014 12:51 PM
Last Updated : 10 Dec 2014 12:51 PM

கிளார்க், ஸ்மித், மழை ஆதிக்கம்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 517 ரன்களை எடுத்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் காயம் காரணமாக வெளியேறிய ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், இன்று மீண்டும் களமிறங்கி சதமடித்தார். நேற்று 72 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த ஸ்டீவன் ஸ்மித்தும் சதமடித்தார்.

354 ரன்கள் எடுத்து 6 விக்கெட் இழந்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை இன்றும் தொடர்ந்தது. நேற்று முதுகில் காயம் காரணமாக ஆடமுடியாமல் 60 ரன்களில் வெளியேறிய ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், இன்றும் ஸ்மித்துடன் இணைந்து களமிறங்கினார்.

ஆரம்பம் முதலே, ஒரு ஓவருக்கு குறைந்தது 4 ரன்கள் வீதம் ஆஸ்திரேலியா எடுத்து வந்தது. பவுண்டரிகளும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இந்திய பந்துவீச்சாளர்கள் எவரும் சிறிதளவு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஆட்டம் ஆரம்பித்த 10 ஓவர்களிலேயே பலத்த மழை குறுக்கிட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டத்தை நிறுத்தியது.

மழைக்குப் பின், ஸ்மித், கிளார்க் இணை மீண்டும் தங்கள் நேர்த்தியான ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஸ்டீவன் ஸ்மித் 172 பந்துகளில் தனது சதத்தை தொட்டார். இதில் 14 பவுண்டரிகளும் அடக்கம். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த கிளார்க்கும் சதத்தை நோக்கி தனது ஆட்டத்தை எடுத்துச் சென்றார். கிளார்க் 98 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது. 90 நிமிடங்களுக்கு மேல் வந்த இந்த இடைவெளி இந்திய அணிக்கு மீண்டும் பின்னடைவாகவே இருந்தது. ஒவ்வொரு மழை இடைவெளியிலும் கிளார்க் மற்றும் ஸ்மித் ஓய்வெடுத்து, மீண்டும் புத்துணர்வோடு ஆட்டத்தை தொடர்வது போலவே இருந்தது.

தொடர்ந்த ஆட்டத்தில், 127 பந்துகளில் கிளார்க் தனது சத்தை எட்டினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 28-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ரன்கள் தொய்வில்லாமல் வர, வலுவான ஸ்கோரை நோக்கி ஆஸ்திரேலிய அணி நடை போட்டது. ஸ்கோர் 473 ஆக இருந்த போது, மூன்றாவது முறையாக மழையால் ஆட்டம் தடைபட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின் ஆட்டம் தொடர்ந்தது.

ஸ்மித் 218 பந்துகளில் 150 ரன்களை அடைந்தார். இன்றைய நாளில் இந்த இணையை ஆட்டமிழக்கச் செய்யமுடியாது என்ற நிலையில், மைக்கேல் கிளார்க் 128 ரன்களில், கரன் சர்மாவின் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்யாத நிலையில் மிட்சல் ஜான்சன் களமிறங்கினார். மோசமான வானிலை காரணமாக அந்த ஓவரிலேயே இன்றைய நாள் ஆட்டம் முடிந்ததாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

முடிவில் ஆஸ்திரேலியா 517 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஸ்டீவன் ஸ்மித் 162 ரன்களுடனும், ஜான்சன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இந்தியப் பந்துவீச்சு எதுவும் எடுபடாத நிலையில், கடைசியில் கரன் சர்மா வீழ்த்திய விக்கெட் இந்திய ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது. வலுவான பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலியா, கண்டிப்பாக நாளை இந்தியாவை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சிக்கும். மோசமான வானிலை தொடரும் பட்சத்தில், நாளை இந்தியாவுக்கு கடினமான நாளாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x