Last Updated : 16 Dec, 2014 01:17 PM

 

Published : 16 Dec 2014 01:17 PM
Last Updated : 16 Dec 2014 01:17 PM

வெட்டிவேரு வாசம் 14 - முரளியைத் துரத்திய கரடி!

முரளியைத் துரத்திய கரடி!

பள்ளி விடுமுறை நாட்கள் வேணு வீட்டில்தான் கழியும். வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பிரம்மாண்ட ஆலமரத்தின் நிழற்பரப்புதான் எங்களுக்கு கிரிக்கெட், கிட்டிப்புள், கபடி மைதானம்.

வேணுவுக்கு இரண்டு தம்பிகள். சுந்தர், முரளி. சின்னவன் முரளிக்கு சிரித்த முகம். உற்சாகமாகப் பந்து பொறுக்கி வருவான். தாகத்துக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் கேட்டு தண்ணீர்க் கொண்டு வருவான். எல்லோருக்கும் செல்லத் தம்பி.

பள்ளிப் படிப்பு முடிந்ததும், வாழ்க்கை திசை மாறியது. வேணுவின் குடும்பம் புலம் பெயர்ந்தது.

பல ஆண்டுகள் கழித்து வேணுவைத் தற்செயலாகப் பார்த்தேன். பொறியியல் படிப்பு. அபுதாபியில் வேலை. ஒரு மகள்.

“தம்பிங்க என்ன பண்றாங்க..?” என்று விசாரித்தேன்.

“சுந்தர் லண்டன்ல செட்டிலாயிட்டான். ஒரு ஆண் குழந்தை…”

“முரளி? அவனுக்கு எத்தனை குழந்தைங்க..?”

வேணுவின் முகம் வாடியது. சற்று நேர மவுனத்துக்குப் பின் முரளியைப் பற்றி வெளிப்படையாகச் சொன்னான்.

“அபுதாபிலேர்ந்து வருஷத்துக்கு ஒரு தடவைதான் சென்னை வருவேன். போன்ல அப்பப்ப அம்மா, அப்பாவோட பேசுவேன். ஒரு வருஷமா முரளிக்கிட்ட பேச முடியல. எப்ப கேட்டாலும், ‘இன்ஸ்பெக்‌ஷனுக்குப் போயிருக்கான், டூர் போயிருக்கான்'னு வீட்ல சொல்வாங்க. சந்தேகமே வரல... போன வருஷம் வீட்டுக்கு வந்தப்ப அம்மாவும் அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறாங்க. மூஞ்சியில சிரிப்பே இல்ல...”

வேணு தொடர்ந்தான்.

‘முரளி எங்கம்மா?’

‘மொட்டை மாடி ரூம்ல இருக்கான்டா… ’ என்றாள் அம்மா.

அவனைப் பார்க்கப் படியேறினேன்.

‘வேணு…’ என்று அம்மாவின் குரல் இழுத்தது. திரும்பினேன். அம்மாவின் கண்களில் கண்ணீர். ‘இரு நானும் வரேன்...’

மொட்டை மாடியில் அறை ஜன்னல்களின் கண்ணாடிச் சதுரங்கள் மீது துளி ஒளி கூடப் புக முடியாமல் பேப்பர் ஓட்டப்பட்டிருந்தது. கதவு பூட்டியிருந்தது. அம்மா சாவியைப் பூட்டில் பொருத்தும்போது கை நடுங்கியது.

‘என்னம்மா ஆச்சு முரளிக்கு?’ என்றேன் திகிலுடன்.

‘கிறுக்குப் புடிச்சிருச்சிடா’ - அம்மா ஓவென்று கதறி அழத் தொடங்கினாள். ‘ரொம்ப மோசமா நடந்துக்கறான். எந்த நேரமும் கத்தியைக் கையில வெச்சிட்டு குத்திடுவேங்குற மாதிரி கையை ஓங்கறான். யாரைப் பாத்தாலும் கரடி, கரடின்னு கத்தறான்...’

கதவைத் திறந்தேன். அம்மா பின்வாங்கினாள். குப்பென்று வாடை நாசியைத் தாக்கியது. முரளி சுவரில் ஒண்டி உட்கார்ந்திருந்தான். என்னைப் பயத்துடன் பார்த்தான்.

‘ஏய் கரடி! கிட்ட வராதே...’ என்று கத்தியை ஓங்கினான்

உடலில் துணி இல்லை. தரையில் தட்டுகள். உணவு மிச்சங்கள். டம்ளர்கள். சிறுநீர்த் தேக்கங்கள். மலக் கழிவுகள்.

என்னை நோக்கி ஜல்லிக்கட்டுக் காளை போல் பாய்ந்து வந்தான். அசையாமல் நின்றேன். இரண்டடி தூரத்தில் நின்றுவிட்டான்.

‘முரளி... வேணுடா!’ என்றேன்.

அவன் கண்களில் சலனம். கத்தியைக் கீழே போட்டான்.

ஜன்னல் கதவுகளைத் திறந்தேன். அவன் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தேன். கட்டின பசு போல் வந்தான். குளிப்பாட்டினேன். ஆடைகள் அணிவித்தேன். அறையை பிளீச்சிங் பவுடர், டெட்டால் போட்டுச் சுத்தம் செய்தேன்.

இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னேன். சாதுவாகச் சாப்பிடத் தொடங்கினான்.

‘எப்படிம்மா இப்படி ஆச்சு?’”

‘அவனுக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சோம் இல்லியா? மாப்பிள்ளை மாதிரி கெத்தா இருந்துக்கோடா. இது என்ன குழந்தை மாதிரி எந்நேரமும் சிரிப்பும், கூத்தும்னு நாலஞ்சு தடவை அதட்டினேன். அதனாலயானு தெரியல… அப்ப என்னைப் பார்த்து கரடின்னு பயந்தவன்தான்.”

இரவு. மொட்டை மாடிக்கு அழைத்துப் போனேன். நட்சத்திரங்களைப் பார்த்தால் அவனுக்குப் பிடிக்கும். பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்டேன். முரளி சட்டென எழுந்தான். ‘கரடி, கரடி’ என்று முணுமுணுப்புடன் களைத்துப் போகும் வரை என்னைச் சுற்றிச் சுற்றி வந்தான்.

சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அழைத்துப் போனேன். பரிசோதித்தார்.

‘ஸ்கிசோஃப்ரெனியா’ என்றார். ‘எதிர்ல இருக்கறவங்களைப் பாத்தா கரடி மாதிரி என்ன, புலி, சிங்கம், பூதம் மாதிரி கூடத் தெரியும். கொடுமையான பிரமை. ஹாலுசினேஷன். இவர் இப்படி ஆனதுக்கு ஒருவிதத்துல உங்க பேரன்ட்ஸும் காரணம். உங்ககிட்ட கொஞ்சம் அடங்கறாரு. தினம் சிகிச்சைக்கு கூட்டிட்டு வாங்க…’

“இப்ப முரளிக்கு எப்படியிருக்கு, வேணு?”

“ஓரளவுக்கு சரியாயிடிச்சு. பழைய உற்சாகம் இன்னும் திரும்பல. கல்யாணப் பேச்சே எடுக்க வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.”

“அவனைப் பார்க்கணுமே, வேணு..”

வேணு வீட்டுக்குக் கூட்டிச் சென்றான். முரளிக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எனது கண்களில் கண்ணீர். வேணு ஒரு ஆல்பத்தைக் காட்டினான். சிகிச்சைக்கு முன், சிகிச்சைக்குப் பின் ஆல்பம்.

முரளியின் புகைப்படங்களைப் பார்த்தபோது வயிற்றில் கலவரப் பந்து உருண்டது. இப்போது தேறிவிட்டானே என்று ஓர் ஆறுதல்.

‘180’ திரைப்படத்தில் கதாநாயகன் அஜய்க்கு (சித்தார்த்) புற்று நோய். இன்னும் 180 நாட்கள்தான் ஆயுள் என்று தெரியவரும். ஒவ்வொரு நாளும் மரணத்தை எதிர்நோக்கும் அச்சம்.

மரணபயம் தாக்கும்போது நாயகன் எப்படி நடந்து கொள்வான் என்று யோசித்த போது, முரளியின் நினைவு வந்தது. எங்கள் கருத்து இயக்குநர் ஜெயேந்திராவுக்குப் பிடித்திருந்தது.

கரடிக்குப் பதிலாக எமனாக ஒரு கருப்பு அரக்கன்.

எந்நேரமும் யாரோ தன்னைத் துரத்துவது போலவும், அவனிடம் இருந்து தப்பிக்க பயத்துடன் ஓடுவது போலவும் சித்தார்த் தன்னை உருமாற்றிக் கொண்டார். தன்னைத் தொந்தரவு பண்ணுகிறவர்கள் மீது கண்ணாடி டம்ளர்கள், பாட்டில்கள் என்றெல்லாம் வீசி உடைத்து முரளி மாதிரியே நடந்து கொண்டு ரசிகர்களின் பச்சாதாபத்தை ஒட்டு மொத்தமாக அள்ளிக்கொண்டார் சித்தார்த்.

- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x