Published : 06 Apr 2014 09:59 PM
Last Updated : 06 Apr 2014 09:59 PM

டி-20 உலகக்கோப்பையை வென்றது இலங்கை: கோப்பையை வென்று விடைபெற்றனர் சங்கக்காரா, ஜெயவர்த்தனே

இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது இலங்கை. டி-20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வங்கதேசத்தில் மிர்பூரிலுள்ள ஷேர் இ பங்களா தேசிய மைதானத்தில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் 40 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் லசித் மலிங்கா, இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார்.

அரையிறுதியில் விளையாடிய இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, ரஹானே களமிறங்கினர்.

எட்டு பந்துகளில் 3 ரன்கள் சேர்த்த நிலையில் மாத்யூஸ் பந்து வீச்சில் ஸ்டெம்புகள் சிதற விக்கெட்டைப் பறிகொடுத்தார் ரஹானே. அப்போது அணியின் எண்ணிக்கை 4. ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் இலங்கை வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசியதால், இந்திய அணியின் ஸ்கோர் மிக மெதுவாக உயர்ந்தது.

நான்கு ஓவர் முடிவில் இந்திய அணி 15 ரன்களையே எடுத்திருந்தது. மலிங்கா வீசிய முதல் ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டன. சர்மா ரன் அவுட் வாய்ப்பிலிருந்து தப்பினார்.

7-வது ஓவரில் கோலி கொடுத்த கேட்சை மலிங்கா தவற விட்டார். ஹெராத் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி தன் அதிரடியைத் தொடங்கினார் கோலி. மறுபுறம் சர்மாவும் அடித்து விளையாட ஸ்கோர் வேகமாக உயரத் தொடங்கியது.

மாத்யூஸ் வீசிய 10-வது ஓவரில் கோலி தலா ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்தார். ஹெராத் வீசிய 11-வது ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார் சேனநாயகவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த யுவராஜ் சிங் ரன் எடுக்கவே திணறினார். அதே சமயம் கோலி விளாசினார். 43 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். குலசேகரா வீசிய 16-வது ஓவரில் கோலி அடுத்தடுத்து ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார். அந்த ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டன.

யுவராஜ் ரன்களைச் சேர்க்கத் திணறியதால், இந்திய அணியின் ஸ்கோர் எடுக்கும் வேகம் தேங்கியது. 19-வது ஓவரின் முதல் பந்தில் யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளைச் சந்தித்து 11 ரன்களை எடுத்தார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் தோனியும் ரன் எடுக்கச் சிரமப்பட்டார். 20-வது ஓவரின் கடைசி பந்தில் தோனி பந்தை அடித்து விட்டு ரன்னுக்கு ஓட, 2வது ரன்னுக்கு ஓடிய கோலி ரன் அவுட் ஆனார். கோலி 58 பந்துகளில், 4 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவித்தார். தோனி 7 பந்துகளில் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் குவித்தது.

முதலும் முடிவும்

இந்திய அணி 130 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதற்கு முதல் மற்றும் கடைசி 4 ஓவர்களை இலங்கை அணியினர் நேர்த்தியாக வீசியதே காரணம். முதல் நான்கு ஓவர்களில் இந்திய அணி 15 ரன்களையும், கடைசி நான்கு ஓவர்களில் 19 ரன்களையும் மட்டுமே எடுத்தது.

தொடக்கம் சறுக்கல்

எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு தொடக்கம் சறுக்கலாய் அமைந்தது. அந்த அணியின் பெரேரா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மோஹித் சர்மா பந்து வீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய தில்ஷன் 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 4 பவுண்டரிகளை விளாசினார்.

தங்களது கடைசி டி-20 போட்டியில் விளையாடும் சங்ககாராவும் ஜெயவர்த்தனேவும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அடித்து விளையாட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியை ரெய்னா பிரித்தார். ஜெயவர்த்தனே 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த போது, அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திரிமன்னேவை மிஸ்ரா வெளியேற்றினார். அவர் 7 ரன்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சங்ககாரா அதிரடி

இதையடுத்து சங்ககாராவுடன் பெரேரா ஜோடி சேர்ந்தார். சங்ககாரா அதிரடியாக ஆட, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மிஸ்ரா வீசிய 15-வது ஓவரில் பெரேரா ஒரு சிக்ஸரும், சங்ககாரா ஒரு பவுண்டரியும் விளாசினர். மிஸ்ரா வீசிய 16-வது ஓவரில் சங்ககாரா ஒரு பவுண்டரியும், பெரேரா ஒரு சிக்ஸரும் விளாசினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சங்ககாரா 33 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இலங்கை அணி வெற்றி பெற 18 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் 18-வது ஓவரை வீசினார் அஸ்வின். அந்த ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகளை சங்ககாரா விளாசினார். 5-வது பந்தை பெரேரா சிக்ஸருக்கு அனுப்ப, இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது. சங்ககாரா 35 பந்துகளில் 52 ரன்களுடனும், திசாரா பெரேரா 14 பந்துகளில் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். சங்ககாராவின் 52 ரன்களில் 1 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். கடைசி சர்வதேச டி-20 போட்டியில் விளையாடிய சங்ககாராவும் ஜெயவர்த்தனேவும் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் விடைபெற்றனர்.

ஆட்டநாயகன் விருது சங்ககாராவுக்கும், தொடர்நாயகன் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.

அதிக ரன்

இத்தொடரில் அதிக ரன் குவித்தவர் வரிசையில் விராட் கோலி 319 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். நெதர்லாந்தின் கூப்பர் (231), மைபர்க் (224) ஆகியோர் முறையே 2, 3-வது இடத்திலுள் ளனர். இந்தியாவின் ரோஹித் சர்மா 200 ரன்களுடன் 4-வது இடத்திலுள்ளார்.

அதிக விக்கெட்

தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், நெதர்லாந்தின் ஜமீல் ஆகியோர் தலா 12 விக்கெட்டுகளுடன் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். மேற்கிந்தித் தீவுகளின் பத்ரி 11 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலுள்ளார். இந்தியாவின் அஸ்வின் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி, பட்டியலில் 4-வது இடத்திலுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x