Published : 18 Dec 2014 03:30 PM
Last Updated : 18 Dec 2014 03:30 PM

உமேஷ் யாதவ், ஸ்மித் அபாரம்: ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள்

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியா 408 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் 88 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்தும், மிட்செல் மார்ஷ் 7 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். உமேஷ் யாதவ் 13 ஓவர்கள் 2 மைடன்கள் 48 ரன்கள் 3 விக்கெட்டுகள்.

இஷாந்த் சர்மாவும் வருண் ஆரோனும் பந்து வீசத் தொடங்கினர். ஓவர் த விக்கெட்டில் வீசாமல் இசாந்த் சர்மா ரவுண்ட் த விக்கெட்டில் வீசியது இந்த முறை பயனளிக்கவில்லை.

முதல் ஓவரை ஓவர் த விக்கெட்டில் வீசி பலன் கண்ட இசாந்த் சர்மா 3-வது ஓவரில் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி 2 மோசமான பந்துகளில் 2 பவுண்டரிகளை வார்னருக்கு வழங்கினார். மீண்டும் 5-வது ஓவரும் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி 3 பவுண்டரிகளை வார்னருக்கு கொடுத்தார். வார்னர் அடித்த நேர் டிரைவ் அற்புதமான ஷாட்.

3 ஓவர்களில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சொத்தையாக வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்த இசாந்த் ஓவரை கட் செய்தார் தோனி. 8 ஓவர்களில் ஸ்கோர் 43 ரன்கள் என்றிருந்த போது உமேஷ் யாதவ் மீண்டும் வீச வந்தார். முதல் பந்தை வார்னர் பன்ச் செய்து பவுண்டரி அடித்தார். 3-வது பந்து நல்ல திசையில் ஒரு ஷாட் பிட்ச் பந்தை உமேஷ் வீச புல் ஆட முயன்ற வார்னர் டாப் எட்ஜ் செய்தார். ஸ்லிப்பில் அஸ்வின் கேட்ச் பிடித்தார். வார்னர் 28 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கிறிஸ் ராஜர்சுக்கு பிரிஸ்பன் பிட்சின் வேகம் பிடித்துப் போக ஆஃப் திசையில் சில அபாரமான ஷாட்களை விளையாடினார். வாட்சன் களமிறங்கி வருண் ஆரோனின் பவுன்சரில் தப்பிப் பிழைத்தார். அதன் பிறகு அவரும் விரைவாக 25 ரன்களைச் சேர்க்க 2வது விக்கெட்டுக்காக 51 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் அப்போது ஆட்டத்தின் 20-வது ஓவரில் அஸ்வினின் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று தவானின் அபாரமான கேட்சிற்கு ஆட்டமிழந்தார்.

அதற்கு அடுத்த வருண் ஆரோன் ஓவரில் 3 அபாரமான பவுண்டரிகளை அடித்தார் கிறிஸ் ராஜர்ஸ். பிறகு அஸ்வினை கட் செய்து பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் கடந்தார் ராஜர்ஸ். 55 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் வீசிய லெக் திசை பந்தை லெக் திசையில் தட்டி விட நினைத்தார் பந்து கிளவ்வில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது. 121/3 என்ற நிலையில் ஆஸி. சற்றே ஆட்டம் கண்டது.

ஆனால் கேப்டன் ஸ்மித், ஷான் மார்ஷ் இணைந்து 87 ரன்களை 22 ஓவர்களில் சேர்த்தனர். இதில் ஷான் மார்ஷ் 32 ரன்களை எடுத்திருந்த போது முதலில் ஆரோனின் பவுன்சரை புல் ஆட முயன்றார் பந்து அருகிலேயே ரஹானேயிடம் உயரே இருந்து வந்தது ஆனால் அவர் கோட்டை விட்டார். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் உமேஷ் யாதவ்வின் நல்ல வேகமான பந்து அவரது மட்டை விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் அஸ்வினிடம் சரண் அடைந்தது.

ஸ்மித் ஆக்ரோஷமாக ஆடினார். 40-வது ஓவரில் அஸ்வின் பந்தை இருமுறை இறங்கி வந்து நேராக சிக்சர் அடித்தார். அவரை வீழ்த்திவிட்டால் இந்தியா முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற வாய்ப்பிருக்கிறது. இன்று இந்தியாவின் கடைசி 6 விக்கெட்டுகளை 87 ரன்களுக்கு ஆஸ்திரேலியா கைப்பற்றியதோ அதே போல் நாளை இந்தியாவும் செய்தால் 100 ரன்கள் முன்னிலை பெற்று பலமான நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x