டிராவைப் பற்றி நான் எந்தக் கட்டத்திலும் யோசிக்கவில்லை: விராட் கோலி திட்டவட்டம்

டிராவைப் பற்றி நான் எந்தக் கட்டத்திலும் யோசிக்கவில்லை: விராட் கோலி திட்டவட்டம்
Updated on
2 min read

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கடினமான பிட்சில், கடும் நெருக்கடியில் தலைசிறந்த டெஸ்ட் சதத்தை எடுத்த கேப்டன் விராட் கோலி எந்த கட்டத்திலும் டிரா பற்றி யோசிக்கக் கூட இல்லை என்று உறுதியுடன் கூறினார்.

"எனக்கு ஒரே சிந்தனைதான், நான் ஒற்றைப் பரிமாணத்தில் யோசித்தேன். எனக்கு அதுதான் தெரியும். நேற்று அணியினரிடத்தில் கூறினேன், அவர்கள் என்ன இலக்கை நமக்கு நிர்ணயித்தாலும் சரி, நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், நாம் வெற்றி பெற ஆட வேண்டும் என்று கூறினேன். நான் அனைவரிடமும் இதைத்தான் கூறினேன். ஏனெனில் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவதைப் பற்றி யோசிப்பது அவசியம் என்று நினைத்தேன். ஏனெனில் எதிரணியினருக்கு நெருக்கடி கொடுக்க அதுதான் ஒரே தீர்வு.

டிராவுக்கு ஆடுவதில் எந்த ஒரு பயனும் இல்லை, அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தால் அவர்கள் சடக்கென தங்களது உத்தியை மாற்றி ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு வந்தால் பிறகு நாம் அங்கு நிற்க முடியாது. அவர்கள் என்ன பந்து வீசினாலும் அதனை அடித்து நொறுக்குவதற்கான திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம். இப்படித்தான் நேற்று பேசினோம், அதற்கு வீரர்கள் சிறப்பாக வினையாற்றினார்கள். நாங்கள் விளையாடிய விதம் பற்றி எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இலக்கிற்கு சற்று குறைந்து போனோம், ஆனால் சரியான அணுகுமுறை இருந்த பட்சத்தில் அது ஒரு பெரிய விஷயமல்ல. நாம் வெற்றிக்கு தொலைவில் இல்லை.

நானும் முரளி விஜய்யும் இன்னும் கூடுதலாக 40 ரன்களை சேர்த்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது இதுதானே. ஆனால் ஆட்டத்தின் எந்த நிலையிலும் டிரா பற்றி நான் யோசிக்கவேயில்லை. நேதன் லயனுக்கு பந்து சதுரமாகத் திரும்பியது, அந்த நிலையில் அவரை தொடர்ந்து தடுத்தாடிக் கொண்டேயிருந்தால் அவுட் ஆவதில்தான் போய் முடியும் என்று எனக்கு தெரிந்தது. அதனால் நாம் நெருக்கடிக்கு ஆளாவதை விட அவரை நெருக்கடிக்கு ஆளாக்க முடிவு செய்தேன். அவருக்கு எளிதான விக்கெட்டை கொடுக்க விரும்பவில்லை.

விஜய் ஆட்டமிழந்த பிறகு கூட நான் ரஹானே, ரோஹித் சர்மா மீது நம்பிக்கை வைத்திருந்தேன். இவர்களில் யாரேனும் ஒருவர் என்னுடன் நின்றிருந்தால் இலக்கு என்பது ஒன்றுமல்ல. சஹா ஆட்டமிழந்த பிறகு கரன் சர்மா இறங்கிய போது கூட நான் அவரிடம் எனக்கு ஸ்ட்ரைக்கைக் கொடு என்றே கூறினேன். அவர் அப்படி இப்படி நின்றிருந்தால் போதும் வெற்றி நிச்சயம் என்றே ஆடினேன். எனக்கு எந்த வித வருத்தமுமில்லை. அனைவரும் சிறப்பாக கடைசி நாளில் ஆடினர்.

நான் அவுட் ஆன பந்து: அந்தப் பந்தை ஸ்கொயர்லெக் திசையில் ஒரு இடத்தில் பந்து பிட்ச் ஆகி செல்லுமாறு அடிக்கவே நினைத்தேன், ஆனால் இது பற்றியும் எனக்கு வருத்தமில்லை. வேண்டுமானால் பின்னால் ஒருநாள் அந்த ஷாட்டை ஆடியிருக்க வேண்டாமோ என்று எனக்கு தோன்றலாம். ஆனால் நான் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலிருந்தே வருவதை நினைத்துக் கவலைப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

நம் நாட்டிற்காக ஆடவேண்டும் என்று நினைத்து இங்கு வந்து விட்டால், இங்கு கடப்பாடுடனும், நேசத்துடனும் ஆட்டத்தை விளையாட வேண்டும். இதனால்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது எனக்கு பிடித்தமானது. நான் எதனை நம்புகிறேனோ அந்த வழியில் அவர்கள் விளையாடுகின்றனர். எப்போதும் போராட்டத்தையும், சவாலையும் அளிப்பதே கிரிக்கெட்.”

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in