Last Updated : 02 Dec, 2014 10:58 AM

 

Published : 02 Dec 2014 10:58 AM
Last Updated : 02 Dec 2014 10:58 AM

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி- மீண்டும் மேஜிக் நிகழ்த்துவாரா சர்தார் சிங்?

2014-ம் வருடம் இந்திய ஹாக்கி அணிக்குப் பிரகாசமாக அமைந்துவிட்டது. காமன்வெல்த் கேம்ஸில் வெள்ளி, 16 வருடங்கள் கழித்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், 2016 ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதியடைந்தது, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து தொடரை வென்றது என இந்திய ஹாக்கி நினைத்துப் பார்க்கமுடியாத சாதனைகளை இந்த வருடம் நிகழ்த்திவிட்டது. இந்த வெற்றிகள் அனைத்தும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங்கின் துணை இல்லாமல் சாத்தியமாகியிருக்காது. இந்த வாரம் ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் தொடங்கும் (டிசம்பர் 6-14)) சாம்பியன்ஸ் டிராபி, சர்தாருக்கான அடுத்த தேர்வு.

இந்தியாவின் வரம்

கடந்த சிலவருடங்களாக மோசமான நிலையில் உள்ள இந்திய ஹாக்கி அணிக்கு வரமாக கிடைத்தவர் சர்தார் சிங். 8 முறை ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி 2008ல், பீஜிங் ஒலிம்பிக்ஸில் தேர்வாகாதது பெரிய அவமானம். அடுத்த 2012 ஒலிம்பிக்ஸில் பங்குபெற்றாலும் கடைசி இடம்தான் கிடைத்தது. இந்த நிலையில், உலகின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவராக மதிப்பிடப்படும் அளவுக்கு வளர்ந்து இந்திய ஹாக்கி அணிக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் 28 வயது சர்தார் சிங்.

சர்வதேச ஹாக்கி சங்கத்தின் 2012-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் சர்தார் இடம்பிடித்தார். உலகின் சிறந்த வீரர்கள் கொண்ட அணியில் 2010, 2011 ஆகிய இரு ஆண்டுகளிலும் சர்தாருக்கு ஓர் இடம் கிடைத்தது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரின் கடைசிப் போட்டியில், 200-வது சர்வதேச ஆட்டத்தை ஆடினார். எந்த ஒரு விளையாட்டு வீரரைப் போல சர்தார் சிங்கின் வாழ்க்கையும் பல திருப்பங்கள் கொண்டது.

ஹரியானாவில் சாந்த்நகர் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார். சாந்த்நகரில் ஹாக்கிதான் புகழ்பெற்ற விளையாட்டு. சர்தாரின் அண்ணன் ஹாக்கி வீரர். அவருடன் மைதானத்துக்கு கூடச் சென்று அப்படியே ஹாக்கி பழகினார். ஆர்வம் அதிகமாக, நம்தாரி ஹாக்கி அகாடமியில் சேர்ந்துகொண்டார். ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது, ஹாக்கி அகாடமியில் குளிர்காலத்தில் கூட காலையில் 4 மணிக்கு எழுப்புகிறார்கள் என்பதால் அகாடமியை விட்டு ஓடிவந்துவிட்டார் சர்தார். பின்னர், அவருடைய அம்மா தான் அறிவுரை சொல்லி மீண்டும் அகாடமிக்குத் திருப்பி அனுப்பினார். “காலையில் 4 மணிக்கு எழாமல் இருந்திருந்தால் நானும் ஒரு வழக்கமான கிராமத்து மனிதனாகவே வாழ்ந்திருப்பேன்” என்கிற சர்தார் இந்திய அணியில் மிட்ஃபீல்டராக ஆடிவருகிறார்.

2003ல் போலந்துக்கு எதிராக இந்திய ஜூனியர் அணியில் அறிமுகம் ஆனார் சர்தார். ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சர்தாரால் ஹாக்கி ஸ்டிக்கைக் கொண்டு பந்தைத் தொடவே முடியவில்லை. தனக்குத் திறமையே இல்லை என்று பயந்தார். உடனே அமெரிக்கா சென்று அங்குள்ள ஹாக்கி கிளப்புகளில் விளையாடி, கூடவே வேறு ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.

அடுத்ததாக, ஜூனியர் உலகக்கோப்பை அணியிலும் தேர்வாகாததால் தன் முடிவில் உறுதியாக இருந்தார். நல்லவேளையாக இந்திய அணியின் சீனியர் கேம்புக்குத் தேர்வானார். இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது, மீண்டும் முயற்சி செய்து அணியில் இடம்பிடிக்கலாம் என்று மனத்தை மாற்றிக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார். பிரிமியர் ஹாக்கி லீகில், ஹைதராபாத் சுல்தான்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார். இதனால் நல்ல கவனம் கிடைத்தது. 2006ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வீரரராக களம் இறங்கினார் சர்தார். 2008ல், 22 வயதில் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கு, இந்திய அணியின் கேப்டன் ஆனார். இந்தியாவின் இளம் கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றார்.

இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை அடைந்தபோதும் சர்தார் தனி ஒருவராக திறமையில் பளிச்சிட்டார். 2010, 2012 சுல்தான் அஸ்லான் ஷா போட்டிகள், 2010 ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டி ஆகிய முக்கியமான போட்டிகளில் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.

பலமான அணிகள்

உலகத் தரமான வீரர் ஒருவர் அணியில் ஆடுவதாலேயே மற்ற வீரர்களும் சர்தாரைப் போல பொறுப்புணர்வுடன் ஆடப் பழகிவிட்டார்கள். 2014ல் இந்திய அணி பெற்ற வெற்றிகள் இதற்கு உதாரணம். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆஸ்திரேலியத் தொடர் என அடுத்தடுத்து உயரங்களைத் தொட்ட இந்திய அணிக்கு சொந்த மண்ணில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதித் தேர்வு.

இந்தியா, அர்ஜெண்டினா, ஆஸ்தி ரேலியா, பெல்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பாகிஸ்தான் என வலுவான எட்டு அணிகள் சாம்பியன்ஸ் டிராபியில் கலந்துகொள்கின்றன. இதில் ஆஸ்திரேலியா உலக சாம்பியன். ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன். நெதர்லாந்து இரண்டு போட்டிகளிலும் இரண்டாம் இடம் பிடித்த அணி. இந்த வருடம் நெதர்லாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியால் 9-வது இடத்தையே பிடிக்கமுடிந்தது. ஆனால் அதன்பிறகு தொடர்ந்து மூன்று போட்டிகளில் முத்திரை பதித்ததால் சாம்பியன் டிராபியில் இந்திய அணி மீது புதிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதுவும் 3-1 என ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது ஹாக்கி ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டது என்றே சொல்லவேண்டும்.

இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது கடைசி நிமிடங்களில் கோல்களைத் தவறவிட்டு தோற்றுப்போவது. டெர்ரி வால்ஷ் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அவருடன் இணைந்து இதுபோன்ற குறைகளில் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறார் சர்தார். “ஒரு போட்டியில் தோற்றுப்போனால் அந்த இரவில் என்னால் தூங்கமுடியாது. கடுமையாக பயிற்சி எடுத்தும் சிறிய தவறுகளால் வெற்றி வாய்ப்பை இழக்கும்போது வருத்தமாக இருக்கும்.

என்னுடைய ஐபேடில் மேட்சின் வீடியோக்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து தவறை சரிசெய்ய முயற்சி செய்வேன். முன்பு, பல மேட்சுகளில் கடைசி நிமிட கோல்களால் தோற்றுப் போயிருக்கிறோம். ஆனால், தீவிரப் பயிற்சியினால் சமீபத்திய காமன்வெல்த் கேம்ஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தத் தவறைச் செய்யவில்லை” என்கிறார் சர்தார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பெரிய அணிகளுக்கு நிகராக தன்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. இந்தப் போட்டிக்குத் தேர்வான இந்திய வீரர்களில் அதிக அனுபவம் கொண்டவர் சர்தார் தான். அவர், மீண்டும் மேஜிக் நிகழ்த்துவாரா என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் இந்திய ஹாக்கி ரசிகர்கள்.

டிசம்பர் 6 : இந்தியா ஜெர்மனி

டிசம்பர் 7 : இந்தியா அர்ஜெண்டினா

டிசம்பர் 9 : இந்தியா - நெதர்லாந்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x