

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுகளை 369 ரன்களை எடுத்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தனது முதல் போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணி, நேற்றைய ஸ்கோரான 517 ரன்களில் இன்று காலை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் இணை நல்ல துவக்கத்தைத் தந்தனர்.
தவான் 25 ரன்களில் ஹாரிஸ்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய புஜாராவும், விஜய்யும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். சீராக இந்தியாவின் ஸ்கோரும் உயர்ந்தது. அரை சதத்தைக் கடந்திருந்த நிலையில், ஜான்சனின் பந்தில் விஜய் (53 ரன்கள், 88 பந்துகள், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்திருந்தது.
விஜய்க்கு அடுத்து களமிறங்கிய விராட் கோலி, புஜாராவோடு இணைந்து தொடர்ந்து அணியின் ஸ்கோரை நிலையாக எடுத்துச் சென்றார். அவ்வப்போது பவுண்டரிகளும் வரத் தவறவில்லை. புஜாரா 96 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் அரை சதத்தை எட்டினார். ட்ரிங்ஸ் இடைவேளையைத் தாண்டி தொடர்ந்த இந்த பார்ட்னர்ஷிப்பை 50-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் லயான் முறித்தார். 73 ரன்கள் எடுத்திருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக லயானின் பந்தில் புஜாரா ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரஹானேவும், கோலிக்கு ஈடுகொடுத்து தன் பங்கிற்கு ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். தேநீர் இடைவேளையைத் தாண்டி விளையாடிய இந்த இணை ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு சவாலாகவே அமைந்தது. கோலி 86 பந்துகளில் அரை சதம் எட்டினார். ரஹானே 61 பந்துகளில் விரைவாக அரை சதம் எட்டினார். இதில் 10 பவுண்டரிகளும் அடக்கம்.
76-வது ஓவரில் லயான் வீசிய பந்து, எதிர்பாராத விதமாக பவுன்ஸ் ஆக, முன்னால் வந்து ஆடிய ரஹானே பந்தை கணிக்க முடியாமல் தடுமாற, அது எட்ஜில் பட்டு கேட்ச் ஆனது. 62 ரன்களுக்கு ரஹானே பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்த விராட் கோலி, 158 பந்துகளில், பவுண்டரியை அடித்து சதத்தைக் கடந்தார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக முதல் போட்டியிலேயே கோலி சதமடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் முடிய சில ஓவர்களே இருந்த நிலையில், விராட் கோலி (115 ரன்கள், 184 பந்துகள், 12 பவுண்டரி) மிட்சல் ஜான்சனின் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்த இரண்டு ஓவர்களில் இன்றைய நாளின் ஆட்டம் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 33 ரன்களுடனும், சாஹா 1 ரன்னோடும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட இந்தியா 148 ரன்கள் பின் தங்கியுள்ளது.
நாளை மதியம் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி ஆடினால் மட்டுமே, இந்த போட்டி டிராவில் முடியும். எனவே நாளைய ஆட்டம் இந்த டெஸ்ட் போட்டியின் முடிவை தீர்மானிப்பதாக அமையும்.