

திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை படுதோல்வி அடைந்ததற்கு தான் பொறுப்பேற்பதாக இலங்கை அணித் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் விளையாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாத அமர்வில் விளையாட்டுத் துறை துணை அமைச்சராகவும் உள்ள சனத் ஜெயசூரியா இதனை தெரிவித்தார்.
"விளையாட்டுத் துறை அமைச்சர் மீது குற்றம் சுமத்த வேண்டிய அவசியமில்லை. நான் இந்தத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என்று சனத் ஜெயசூரியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னதாக முன்னாள் கேப்டனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுனா ரணதுங்கா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை திருப்தி செய்வதற்காக திடீரென இந்தத் தொடரை ஏற்பாடு செய்த இலங்கை கிரிக்கெட் வாரியம், விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தாநந்த அதுல் கமகே, கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் ஆகியோரை கடுமையாக சாடியிருந்தார்.
மேலும், இந்தத் தோல்விகள் உலகக் கோப்பை தயாரிப்பில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் சாடியிருந்தார்.
இதனையடுத்து, இன்று சனத் ஜெயசூரியா, தோல்விகளுக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.