

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 45 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் மெக்கல்லம் 145 பந்துகளில் 8 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 153 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.
சார்ஜாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் பிலிப் ஹியூஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரத்து செய்யப்பட்ட நிலையில், 3-வது நாளான நேற்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 125.4 ஓவர்களில் 351 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 197 ரன்கள் குவித்தார். நியூஸிலாந்து தரப்பில் கிரேக் 94 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் லேத்தம் 13 ரன்களில் வெளியேற, வில்லியம்சன் களம்புகுந்தார். அவர் நிதானமாக ஆட, மறுமுனையில் வெளுத்து வாங்கிய மெக்கல்லம், 78 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் அதிவேக சதமடித்த நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
3-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 45 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. மெக்கல்லம் 153, வில்லியம்சன் 76 ரன்களுடன் களத்தில் உள்ளனர். பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு நியூஸிலாந்து இன்னும் 102 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.